சீன கடத்தல்காரர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி கிலோ கணக்கில் தங்கம் கடத்திய நேபாள நாட்டின் முன்னாள் சபாநாயகர் கிருஷ்ண பகதூர் மஹரா கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2022-ம் ஆண்டு இ-சிகரெட்டில் மறைத்து வைத்து 9 கிலோ தங்கம் கடத்தப்பட்டு உள்ளது. தொடர்ந்து 2023-ம் ஆண்டில் 61 கிலோ தங்கம் கடத்தப்பட்டு உள்ளது.
இந்த சூழலில், கிருஷ்ண மஹராவின் மகனான ராகுல் மஹராவுக்கு எதிராக கடந்த ஆண்டு, மாவட்ட சட்டமா அதிபர் அலுவலகம் வழக்கு ஒன்றை பதிவு செய்தது. 9 கிலோ தங்கம் கடத்தப்பட்டதில் இவருக்கு தொடர்பு உள்ளது என்ற அடிப்படையில் அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
எனினும் இதே போன்று, கிருஷ்ண மஹராவிடம் நடந்த காவல்துறை விசாரணையில், சீன கடத்தல்காரர்களுடன் இவர் தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்துள்ளார் என கண்டறியப்பட்டது.
இதன் அடிப்படையில், கபிலவஸ்து மாவட்டத்தில் வைத்து, கிருஷ்ண பகதூர் நேற்று கைது செய்யப்பட்டார். நீதிமன்றின் அனுமதியுடன் அவர் காவலில் வைக்கப்படுவார்.
அத்தோடு அவரை நேற்று காலை விமானம் வழியே அதிகாரிகள் காத்மண்டு நகருக்கு அழைத்து சென்றனர். அவருடைய காவலை நீடிப்பதற்காக, மஹரா நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.