இஸ்ரேல்-ஹமாஸ் போர் 5-வது மாதத்தை நெருங்கி வரும் நிலையில் உலகெங்கும் இரு தரப்பினருக்கும் ஆதரவாக மக்கள் ஆங்காங்கே கருத்து கூறி வருகின்றனர்.
இங்கிலாந்தில், இரு தரப்பினரில் ஒருவரை ஆதரிப்பவர்களால் மற்றொரு தரப்பினர் விமர்சிக்கப்படுவது தீவிரமாகி வருகிறது.
ஒரு சில இடங்களில் போராட்டங்களும், வன்முறை சம்பவங்களும் நடந்து வருகிறது. மேலும், சில பாராளுமன்ற உறுப்பினர்களின் இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறித்த கருத்துகளுக்கு எதிராக அவர்களின் இல்லங்களுக்கு எதிரில் போராட்டங்கள் நடந்தன.
இவ்வாறுஇருக்கையில், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், லண்டன் நகரின் 10, டவுனிங் தெருவில் உள்ள தனது அதிகாரபூர்வ இல்ல வாசலில் நாட்டு மக்களுக்கு இது குறித்து உணர்ச்சிகரமாக உரையாற்றினார்.
அப்போது அவர் தெரிவித்திருப்பதாவது:
நாட்டின் முதல் வெள்ளையரல்லாத பிரதமராக உங்கள் முன் நான் நிற்கிறேன்.
பயங்கரவாத சித்தாந்தங்களில் நம்பிக்கை உடையவர்களால் இங்கிலாந்தின் ஜனநாயகமே அழியும் நிலையில் உள்ளது.
நம் நாட்டிற்குள் நெடுங்காலமாக தங்கியுள்ள அயல்நாட்டினர், நாட்டின் வளர்ச்சிக்கு அவர்களின் பங்கை முழுமையாக அளித்துள்ளனர்.
நீங்கள் இந்துவாக இருந்தும் என்னை போல் ஒரு பெருமைக்குரிய இங்கிலாந்து நாட்டினராக இருக்கலாம்; ஒரு இறை நம்பிக்கைமிக்க முஸ்லீமாக இருந்து தேசபக்தி மிகுந்த பிரிட்டன் குடிமகனாகவும் இருக்கலாம்; யூத அல்லது கிறித்துவ மதத்தை சேர்ந்தவராகவும் இருந்து நாட்டுபற்று மிக்கவராக இருக்கலாம். அது நம் நாட்டில் சாத்தியமே.
இனத்தால், கலாச்சாரத்தால் மாறுபட்டாலும் ஒன்றுபட்ட பிரிட்டனாக நாம் இருப்பதுதான் நமது சாதனையே.
அத்தோடு பிரிட்டனின் தெருக்களில் ஜனநாயகத்தை சூறையாடும் குரல்கள் ஒலிக்கு தொடங்கி உள்ளது.
வன்முறையை ஏதோவொரு வகையில் நியாயப்படுத்தும் அணிகள் உருவாகி வருகின்றன.
நம்மை பிரித்து நமது மனங்களில் விஷத்தை விதைக்க நினைக்கும் சக்திகளுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டிய நேரம் வந்து விட்டது.இவ்வாறு ரிஷி சுனக் தெரிவித்தார்.