இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் சிவனொளிபாத மலையில் விசேட வேலைத்திட்டம் நேற்று முன்தினம் புதன்கிழமை (20) முன்னெடுக்கப்பட்டது. அந்த வகையில் நல்லதண்ணீர் சிவனொளிபாத மலையின் அடிவாரத்திலிருந்து சிவனொளிபாத மலை உச்சிவரை சமாதான விழுமியப் பண்புகள் அடங்கிய சுமார் 30 பெயர்ப்பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டன.
சிவனொளிபாத மலை பருவ காலத்தின் போது பல்லாயிரக்கணக்கான யாத்திரிகர்கள் தரிசனம் செய்வதற்காக சிவனொளிபாத மலைக்கு வந்து செல்கின்றனர். சாந்தி, சமாதானம், நல்லிணக்கம், சகவாழ்வு, சமத்துவத்தை யாத்திரிகர்கள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்கிலேயே இந்த விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதற்கான நிகழ்வின் போது நல்லதண்ணீர் பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக சர்வமத வழிபாடு நடைபெற்றது. இதன்போது சாந்தி, சமாதானம், சகவாழ்வு, விழுமியப்பண்பு ஆகிய விடயங்களை உள்ளடக்கிய நூல்கள் மற்றும் கையேடுகள் யாத்திரிகர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து சிவனொளிபாத மலைவரை சர்வமத குழுவினர் பாத யாத்திரை சென்றனர்.
தேசிய சமாதான பேரவையின் நுவரெலியா மாவட்ட இணைப்பாளர் ஈரேசாவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் நுவரெலியா மாவட்ட தேசிய சமாதான பேரவைத் தலைவர் பிரம்மஸ்ரீ கலாநிதி நந்தகுமார் குருக்கள், ரத்தின தேரர், போதகர் ஜெரி ஆனந்தராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.