அரசாங்கத்திற்கு சொந்தமான இரண்டு உர தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் உயர்தரத்திலான தேயிலை உரம் சந்தை விலையை விட குறைவாக தேயிலை தொழில்துறையினருக்கு வழங்கப்படும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) 37ஆவது ஆசிய பசிபிக் மாநாட்டுக்கு இணையாக “Agri tech-24 Agricultural Technology Vision” கண்காட்சி நாளை (02) ஹம்பாந்தோட்டை விவசாய தொழில்நுட்ப பூங்காவில் நடைபெறும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
இந்த நாட்களில் நாடு முழுவதும் வெப்பமான காலநிலை நிலவுகிறது. இதனால் நீர் ஊற்றுகள் இல்லாமல் போகிறது. இந்த நிலைமையை கருத்தில் கொண்டு ஒரே நாளில் முழு வயலிலும் நெற்பயிர்ச்செய்கையை மேற்கொள்ளுமாறு விவசாய சமூகத்திடம் கேட்டுகொள்கிறோம்.
மேலும், விவசாயத்துறையில் நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த எதிர்பார்க்கிறோம். நாற்று நடுதலுக்காக “பரசூட்” முறைமையை பயன்படுத்த வேண்டும். அது குறித்த பொறுப்பு விவசாய துறையினரை சார்ந்துள்ளது. வயல் உழுவதற்காக, “வட்டு கலப்பை” மற்றும் “மில் போட் கலப்பை” ஆகிவற்றை பயன்படுத்துமாறு கோருகிறோம். தற்போது வெற்றிகரமாக விவசாயம் செய்து வரும் விவசாயிகள் தங்கள் அறுவடை இலக்குகளை அடைந்துகொள்ள மேற்படி முறைமைகளை பயன்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.