உலகளவில் உடல் எடை குறைவினால் பாதிக்கப்பட்டவர்களில் பெண்களின் வீதம் இந்தியாவுக்கு அடுத்தபடியாக இலங்கையில் உள்ளது.
இலங்கையில் ஐந்து முதல் 19 வயது வரையிலான 410,000 பாடசாலையில் கல்வி கற்கும் பெண் பிள்ளைகள் போசணைக் குறைபாடு காரணமாக எடை குறைவாக இருப்பதாக வைத்தியர்களின் மருத்துவ மற்றும் குடியுரிமைகள் நிபுணத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
எனினும் குறித்த விடயம் தொடர்பாக வைத்தியர்களின் மருத்துவ மற்றும் குடியுரிமைகள் நிபுணத்துவ சங்கத்தின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ நேற்றைய தினம் (08) கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “பிரித்தானிய லான்செட் மெடிக்கல் ஜேனல் இதழின் ஆய்வின் படி உலகில் போசணை குறைபாடு காரணமாக உடல் எடை குறைந்தவர்கள் அதிகம் இருக்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளது.
மேலும் 199 நாடுகளில் 22 கோடி பேரிடம் சுமார் 1,900 ஆராய்ச்சியாளர்களின் பங்கேற்புடன் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் உடற் திணிவுச் சுட்டி (உயரத்திற்கான எடை) முக்கிய அளவுகோலாக எடுக்கப்பட்டுள்ளது.
அதாவது ஒருவரது உடலினது உயரத்திற்கு பொருத்தமான நிறை எவ்வளவு என்பதை கணித்தல் உடற் திணிவுச் சுட்டி ஆகும்.
இவ்வாறு 1990 முதல் 2022 வரை சேகரிக்கப்பட்ட தரவுகளைப் பயன்படுத்தி முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டுள்ள நிலையில், போசணைக் குறைபாட்டால் பாடசாலை பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவது மட்டுமன்றி மனவளர்ச்சி குன்றும் ஆபத்தில் உள்ளனர்.
எனவே இதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் நாட்டில் மனவளர்ச்சி குன்றிய பிள்ளைகளின் தலைமுறை உருவாகுவதுடன் போசணை குறைபாடு காரணமாக பிள்ளைகளிடையே என்சைம்கள் மற்றும் ஹோர்மோன்களின் உற்பத்தி பலவீனமடைந்து நாளாந்த உடல் செயல்பாடுகளில் தொய்வு நிலை ஏற்பட வழிவகுக்கிறது.
அத்தோடு சிறுவர்கள் நோயெதிர்ப்பு சக்தி குறைபாடு காரணமாக பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுவதுடன் போசணைக் குறைப்பாடு நெருக்கடியானது மனவளர்ச்சி குன்றுவதற்கு முக்கிய காரணமாக உள்ளது.
இது நாட்டில் தேசிய அபிவிருத்திக்கு பங்களிக்கக்கூடிய கல்வி கற்ற மற்றும் புத்திசாலி இளைஞர்களின் எண்ணிக்கை குறைவதற்கு வழிவகுப்பதோடு மேலும் நாட்டில் 17.8 சதவீத ஆண் பிள்ளைகள் தங்கள் வயதுக்குக் குறைவான எடையுடன் உள்ளனர்.
அதாவது 450,000 ஆண் பிள்ளைகள் உள்ள நிலையில் நாட்டில் மொத்தமான 860,000 பாடசாலை மாணவர்கள் எடை குறைவாக இருப்பதாக புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன” என அவர் குறிப்பிட்டுள்ளார்.