அமெரிக்காவில் டிக்டொக் (Tik Tok) செயலியை தடை செய்ய வழி வகுக்கும் சட்டமூலம் ஒன்று அந்நாட்டு பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன்மூலம் அமெரிக்காவில் தடையை தவிர்க்க அந்த சமூகதளத்தின் சீன தாய் நிறுவனமான பைடான்ஸ் ஆறு மாதத்திற்குள் தனது கட்டுப்படுத்தும் பங்குகள் அல்லது செயலியை விற்க வேண்டி ஏற்பட்டுள்ளது.
எனினும் பிரதிநிதிகள் சபையில் அதிகப் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டமூலம் சட்டமாவதற்கு செனட் சபையின் ஆதரவை பெற வேண்டி இருப்பதோடு ஜனாதிபதியின் கையொப்பமும் தேவையாக உள்ளது.
டிக்டொக் மீதான சீனாவின் செல்வாக்கு தொடர்பில் அமெரிக்காவில் நீண்ட காலமாக கவலை இருந்து வருகிறது.
சுமார் 170 மில்லியன் அமெரிக்கர்கள் பயன்படுத்தும் டிக்டொக் நாட்டின் பாதுகாப்புக்கு மிரட்டல் அளிப்பதாக அதிகாரிகள் நம்புகின்றனர்.
‘டிக்டொக் தடை செய்யப்பட்டால் வீடியோ தயாரிப்பாளர்கள், சிறிய வர்த்தகர்கள் ஆகியோர் வருமானத்தை இழக்க நேரிடும். 300,000 அமெரிக்கர்களின் வேலைகள் பாதிக்கப்படக்கூடும்’ என்று டிக்டொக் தலைமை நிர்வாக அதிகாரி ஷோ சி சியு குறிப்பிட்டுள்ளார்.