இராணுவத்தினரால் வழிபட்டு வந்த சிவலிங்கம் ஒன்றை வெள்ளை நாக பாம்பு ஒன்றும் வழிபட்டு வந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பகுதியில் இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக கடந்த 33 வருடங்களாக காணப்பட்ட சுமார் 20 ஏக்கர் காணி அண்மையில் காணி உரிமையாளர்களிடம் மீள கையளிக்கப்பட்டது.
விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள் ஒரு காணிக்குள் புளிய மரம் ஒன்றின் கீழ் சிறு பிள்ளையார் கோவில் ஒன்றை அமைத்து , அதனுள் ஆட்டுக்கல் ஒன்றினை சிவலிங்கமாக உருவகப்படுத்தி இராணுவத்தினர் வழிபட்டு வந்துள்ளனர்.
அந்த ஆலயத்திற்கு பௌர்ணமி தினம் உள்ளிட்ட விசேட தினங்களில் வெள்ளை நாக பாம்பு உள்ளிட்ட சில பாம்புகள் வந்து செல்வதனை இராணுவத்தினர் அவதானித்து , வெள்ளை நாக பாம்பு ஒன்று சிவலிங்கத்தை சுற்றி இருந்த வேளை அதனை தமது கையடக்க தொலைபேசியில் காணொளியாக பதிவு செய்து வைத்துள்ளனர்.
இந்நிலையில் அண்மையில் அக்காணிகளுக்குள் இருந்து இராணுவத்தினர் வெளியேறிய போது , குறித்த காணொளியை காணி உரிமையாளருக்கு கொடுத்த இராணுவத்தினர் , " இதொரு சக்தி வாய்ந்த கோவில்" என கூறி அதனை தொடர்ந்து பராமரிக்குமாறு கூறியுள்ளனர்.
குறித்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருவதால் , அக்கோவிலுக்கு பலரும் நேரில் சென்று வழிபட்டு வருகின்றனர்.
இதேவேளை குறித்த கோவில் அமைந்துள்ள பகுதியில் உள்ள புளிய மரத்தில் இருந்து வெள்ளை நிற திரவம் ஒன்று வடிந்து வருவதனை அவதானித்துள்ள மக்கள், பால் வடிவதாக கூறுகின்றனர்.