எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தமது கட்சியின் வேட்பாளராக போட்டியிடுவதற்கான பிரதிநிதிகளின் எண்ணிக்கையை ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் அவரது முன்னாள் போட்டியாளரான டொனால்ட் டிரம்ப் வென்றுள்ளனர்.
நான்கு மாநிலங்கள், அமெரிக்க நிலப்பகுதி ஒன்று மற்றும் வெளிநாட்டில் வாழும் ஜனநாயக கட்சியினர் நேற்று முன்தினம் (12) வாக்களித்த முன்னோடித் தேர்தலில் ஜோ பைடன் வெற்றியீட்டியுள்ளார்.
இதன்போது பைடன் தமக்குத் தேவையான 1,968 பேராளர்களைப் பெற்றுவிட்டார் என்று அறிவிக்கப்பட்டது. சில மணி நேரத்துக்குப் பின் டிரம்ப் அவருக்குத் தேவையான 1,215 பேராளர் எண்ணிக்கையை அடைந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதன்மூலம் 2020 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட இரு வேட்பாளர்களுமே இம்முறை தேர்தலிலும் போட்டியிடவுள்ளமை உறுதியாகியுள்ளது.
இந்த கோடை காலத்தில் இடம்பெறவுள்ள கட்சி மாநாடுகளில் இருவரும் வேட்பாளராக போட்டியிடுவது உத்தியோகபூர்வமாக உறுதி செய்யப்படவுள்ளது.
அமெரிக்க வரலாற்றில் 70 ஆண்டுகளில் முதல் முறையாகவே முன்னாள் ஜனாதிபதிகள் இருவர் தேர்தலில் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் நியமனத்தை வென்ற பின் பைடன் அறிக்கை வெளியிட்டார். அதில், டிரம்ப்பின் பிரசாரங்கள், வெறுப்பும், பழிவாங்கும் உணர்வும் கொண்டவை என்றும் அவை அமெரிக்காவின் அடித்தளத்தையே மிரட்டக்கூடியவை என்றும் குறைகூறினார்.
வேட்பாளர்கள் உறுதியாகிவிட்டதால் மிக நீண்டகாலத் தேர்தல் பிரசாரமாக இது அமையப் போகிறது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் 5 ஆம் திகதி நடைபெறவுள்ளது.