காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசைக் கண்டிக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், தமிழகத்துக்குக் காவிரி நீர் பெற்றுத்தராத தி.மு.க. அரசை கண்டித்தும் தஞ்சாவூர் திலகர் திடலில் அ.தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் திருவாரூர் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான காமராஜ் வரவேற்று பேசினார்.
ஆர்ப்பாட்டத்திற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை தாங்கி பேசியதாவது:-
காவிரி டெல்டா மாவட்டங்களை பொன்விளையும் பூமியாக காத்தது அ.தி.மு.க. அரசு. ஆனால் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மீத்தேன், ஈத்தேன் திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டு விவசாயிகளுக்கு துரோகம் செய்தார்.
இதனால் மத்திய அரசு டெல்டாவில் ஹைட்ரோகார்பன் எடுக்க தனியாருக்கு அனுமதி கொடுத்தனர். இதன் காரணமாக விவசாய நிலங்கள் பறிபோய் விடுமோ என விவசாயிகள் அச்சத்தில் உறைந்தனர்.
அவர்களின் அச்சத்தை போக்கும் வகையில் நானும் ஒரு விவசாயி என்பதால் காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக எனது தலைமையிலான அ.தி.மு.க. அரசு அறிவித்து சட்டம் கொண்டு வந்தது. இதனால் இன்றைக்கு மட்டுமல்ல எப்போதுமே மீத்தேன், ஹைட்ரோகார்பன் எடுக்க முடியாது. இதனை சாதித்தது அ.தி.மு.க. அரசாங்கம்.
விவசாயிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசு என்றால் அது அ.தி.மு.க அரசுதான். விவசாயி நலமோடு வாழ அதிமுக அரசு எப்போதும் உதவும். அத்தோடு காவிரி பிரச்சனையில் சட்டப் போராட்டம் நடத்தி அதற்கு தீர்வு கண்டதும் அ.தி.மு.க அரசுதான்.
ஜெயலலிதா எண்ணங்கள் படி 50 ஆண்டுகால காவிரி பிரச்சனைக்கு தீர்வு கண்டோம். உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை நிறைவேற்ற நம்முடைய கோரிக்கையை அ.தி.மு.க.வின் 37 எம்பிக்கள் நடைமுறைப்படுத்த பாராளுமன்றத்தில் வலியுறுத்தி பாராளுமன்றத்தை ஒத்திவைக்க செய்ததும் அதிமுக தான். ஆனால் தற்போது தி.மு.க ஆட்சியில் விவசாயிகளுக்கு வேதனை தான் மிஞ்சியது.
அத்தோடு நமக்கு கிடைக்க கூடிய காவிரி நீர் கிடைக்கவில்லை. மேகதாதுவிலும் அணை கட்டுவோம் என கர்நாடகா அரசு தொடர்ந்து கூறி வருகிறது.
அதை திராணியில்லாத தி.மு.க அரசு கண்டு கொள்வதில்லை. போராடிப் பெற்றுத் தந்த வெற்றியை காக்க தவறியதும் தி.மு.க. அரசு தான்.