வடக்கு காசாவுக்கு புதிய தரைவழி பாதையில் ஐ.நா. உதவி விநியோகம்..!!

tubetamil
0

காசாவில் இஸ்ரேலின் தாக்குதல் தொடரும் சூழலில் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் வடக்கு காசாவுக்கு கடந்த மூன்று வாரங்களில் முதல் முறையாக ஐக்கிய நாடுகள் அமைப்பு புதிய தரைவழி பாதை ஒன்றை பயன்படுத்தி உணவு விநியோகத்தை மேற்கொண்டுள்ளது.

உலக உணவுத் திட்டத்தின் ஆறு லொறிகள் காசா எல்லை வேலியின் வாயில் ஒன்றின் வழியாக வடக்கு காசாவை சென்றடைந்ததாக இஸ்ரேலிய இராணுவம் கூறியது.

காசாவில் பஞ்சம் ஒன்று ஏற்படுவதற்கான அச்சுறுத்தலுக்கு மத்தியில் அந்தப் பகுதிக்கான உதவிகளை அனுமதிப்பதற்கு இஸ்ரேலுக்கு அழுத்தங்கள் அதிகரித்து வரும் நிலையிலேயே இந்த உதவி விநியோகம் இடம்பெற்றுள்ளது.





காசா போரில் பட்டினி ஓர் ஆயுதமாக பயன்படுத்தப்படுவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிநாட்டுக் கொள்கைகளுக்கான தலைவர் ஜோசப் பெரல் குறிப்பிட்டிருந்தார். அந்தப் பகுதிக்கு போதுமான உதவிகள் செல்லாதது மனிதனால் உருவாக்கப்பட்ட அனர்த்தம் என்று அவர் சுட்டிக்காட்டி இருந்தார்.

ஐ.நா பாதுகாப்புச் சபையில் கடந்த செவ்வாய்க்கிழமை பேசியபோதே பெரல் இதனைத் தெரிவித்தார்.

‘சமூகம் ஒன்றே உயிருக்காக போராடும் நிலையை நாம் எதிர்கொண்டுள்ளோம். காசாவுக்கு மனிதாபிமான உதவிகள் செல்ல வேண்டி இருப்பதோடு அதனை சாத்தியப்படுத்தும் பொருட்டு ஐரோப்பிய ஒன்றியம் முடியுமான வரை பணியாற்றுகிறது’ என்று குறிப்பிட்டார்.200 தொன் உணவு உதவிகளை ஏற்றிய தொண்டு நிறுவனத்தின் கப்பல் ஒன்று சைப்ரஸில் இருந்து காசாவை நோக்கிய பயணத்தை ஆரம்பித்துள்ளது. அந்தக் கப்பல் இன்று (14) காசாவை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காசா கடற்கரையில் குறிப்பிடப்படாத இடத்தில் இந்தக் கப்பலில் இருந்து உதவிப் பொருட்களை பெறுவதற்கு இறங்கு துறை ஒன்றை குறித்த தொண்டு அமைப்புடன் தொடர்புபட்ட பலஸ்தீனர்கள் அமைத்து வருவதாக கூறப்படுகிறது.

மறுபுறம் காசா கடற்கரையில் உதவி விநியோகத்திற்கான தற்காலிக துறைமுகம் ஒன்றை அமைப்பதற்கான உபகரணங்களை ஏற்றிய அமெரிக்க இராணுவக் கப்பல் ஜெனரல் பிரான்க் எஸ் பெசம் மத்திய கிழக்கை நோக்கி பயணித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும் அவசர தேவையை நாடி இருக்கும் காசா மக்களுக்கு விரைவாக உதவிகளை வழங்குவதற்கு தரைவழி பாதையே விரைவானது என்று கருதப்படுகிறது.

இந்நிலையில் காசா எல்லை வேலி வழியாகச் செல்லும் இஸ்ரேலிய இராணுவப் பாதை ஒன்றை பயன்படுத்தி உலக உணவுத் திட்டம் வடக்கு காசாவில் 25,000 மக்களுக்கு போதுமான உணவு உதவிகளை எடுத்துச் சென்றதாக ஐ.நா கூறியது.

காசா மக்கள் தொகையில் கால் பங்கினரான குறைந்தது 576,000 பேர் பஞ்சம் ஒன்றை நெருங்கி இருப்பதாக ஐ.நா தெரிவித்தது.

வடக்கு காசாவில் கிட்டத்தட்ட 300,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சூழலில் இஸ்ரேலின் கட்டுப்பாட்டுக்கு மத்தியில் அவர்களை அணுகுவதில் பல மாதங்களாக போராட்டம் நீடிக்கும் சூழலில் காலம் தீர்ந்து வருவதாக எச்சரிக்கப்பட்டு வருகிறது. இங்கு போர் நீடிப்பதோடு சமூக ஒழுங்கும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காசாவில் ஊட்டச்சத்து குறைபாட்டினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்திப்பதாக உலக உணவுத் திட்டம் குறிப்பிட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகளாவர்.

 காசாவில் தொடர்ந்தும் இஸ்ரேலின் தாக்குதல்கள் நீடிக்கும் நிலையில் தெற்கில் குண்டு சத்தங்கள் கேட்டதாக அங்குள்ள ஏ.எப்.பி. செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் கடந்த செவ்வாய் இரவு தொடக்கம் இடம்பெற்ற தாக்குதல்களில் மேலும் 70 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

காசா நகரின் டல் அல் ஹவா பகுதியில் நேற்றுக் காலை இஸ்ரேல் வீசிய குண்டுகளில் சிறுவர்கள் உட்பட ஐந்து பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டுள்ளது.

காசா போர் நேற்றுடன் 159 ஆவது தினத்தை எட்டிய நிலையில் அங்கு கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 31,272 ஆக அதிகரித்துள்ளது.

முஸ்லிம்களின் புனித ரமழான் மாதம் ஆரம்பித்த நிலையில் ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெரூசலம் மற்றும் மேற்குக் கரையில் பதற்றம் அதிகரித்துள்ளது.

ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசலத்தின் வடமேற்கு பகுதியில் உள்ள அல் ஜிப் சிறு நகருக்கு அருகில் இஸ்ரேலியப் படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 16 வயது பலஸ்தீன சிறுவன் ஒருவனும் 23 வயது இளைஞர் ஒருவரும் கொல்லப்பட்டிருப்பதோடு மேலும் மூலம் மூவர் காயமடைந்துள்ளனர்.

முன்னதாக ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் ஷுவாபத் அகதி முகாமில் ரமி ஹம்தான் அல் ஹுல்ஹுலி என்ற 13 வயது சிறுவன் இஸ்ரேலிய படையினரால் சுட்டுக்கொள்ளப்பட்டிருப்பதாக பலஸ்தீன செய்திகள் தெரிவிக்கின்றன.

அந்தச் சிறுவன் பட்டாசு ஒன்றை தலைக்கு மேல் உயர்த்தி நின்றிருந்தபோது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருப்பது சி.என்.என். தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோவில் தெரிகிறது. அப்போது தனது கையில் இருந்த பட்டாசு வெடிக்கும் அதேநேரம் சிறுவன் கீழே விழுவது தெரிகிறது.

மறுபுறம் மேற்குக் கரை மற்றும் ஜெரூசலத்திற்கு இடையிலான சோதனைச்சாவடி ஒன்றுக்கு அருகில் நேற்று இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் இரு இஸ்ரேலிய படையினர் காயமடைந்துள்ளனர்.

சோதனைச்சாவடிக்கு சைக்கிளில் வந்த 15 வயது சிறுவனை சோதனைக்கு உட்படுத்த முற்பட்டபோது அந்தச் சிறுவன் கத்தியை எடுத்து தாக்க ஆரம்பித்ததாக இஸ்ரேலிய பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இஸ்ரேலிய பாதுகாப்பு படை அந்தத் தாக்குதல்தாரியை சுட்டுக் கொன்றதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேநேரம் இஸ்ரேல் மற்றும் லெபனான் எல்லையிலும் மோதல் அதிகரித்துள்ளது. தெற்கு லெபனானில் உள்ள பலஸ்தீன அகதி முகாம் ஒன்றுக்கு அருகில் கார் வண்டி ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதாக ரோய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதில் தமது உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டதை ஹமாஸ் உறுதி செய்துள்ளது.

காசாவில் போர் வெடித்தது தொடக்கம் லெபனானின் ஹிஸ்பல்லா அமைப்பு மற்றும் இஸ்ரேல் இடையே தினசரி மோதல் நீடித்து வருகிறது. அது தொடக்கம் லெபனானில் இஸ்ரேலின் தாக்குதல்களில் குறைந்தது 54 பொதுமக்கள் உட்பட குறைந்து 319 பேர் கொல்லப்பட்டிருப்பதாக ஏ.எப்.பி. செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

ஹிஸ்புல்லா அமைப்பின் தாக்குதல்களில் குறைந்தது 10 இஸ்ரேலிய படையினர் மற்றும் ஏழு பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காசாவில் போர் நிறுத்தம் ஒன்றை எட்டும் முயற்சிகளும் ஸ்தம்பித்துள்ள சூழலில் ஏப்ரல் 9 ஆம் திகதி புனித ரமழான் மாதம் முடிவதற்குள் போர் நிறுத்த உடன்பாடு ஒன்று எட்டப்பட வாய்ப்பு உள்ளது என்று கட்டார் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் மாஜித் அல் அன்சாரி குறிப்பிட்டுள்ளார்.

காசாவில் போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்காக மத்தியஸ் முயற்சியில் எகிப்து மற்றும் அமெரிக்காவுடன் கட்டாரும் ஈடுபட்டுள்ளது. மத்தியஸ்தர்கள் உடன்பாடு ஒன்றை நோக்கி இரு தரப்புக்கும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர் என்று அன்சாரி எக்ஸ் சமூகதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top