காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல் ஷிபாவில் இஸ்ரேலிய இராணுவம் நேற்று (18) பாரிய சுற்றிவளைப்பு ஒன்றை நடத்தியதோடு இதனால் பெரும் உயிர் சேதங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் கட்டடம் ஒன்றில் தீ பரவியதாகவும் பலஸ்தீன சுகாதார நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த மருத்துவமனையை ஹமாஸ் மூத்த தலைவர்கள் பயன்படுத்துவதாக உளவுத் தகவல் கிடைத்ததை அடுத்து முக்கியம் வாய்ந்த இந்த சுற்றிவளைப்பை நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது. மருத்துவமனை வளாகத்துக்குள் படையினர் நுழைந்ததும் சூடு நடத்தப்பட்டதாகவும் அது கூறியது.
இந்த மருத்துவமனையை சூழ டாங்கிகள் நிறுத்தப்பட்டிருப்பதாக அங்கிருப்பவர்கள் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளனர்.
போரினால் இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்காக மக்கள் இந்த மருத்துவமனை வளாகத்தில் அடைக்கலம் பெற்றிருப்பதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த நவம்பரில் இந்த மருத்துவமனை வளாத்தில் இஸ்ரேல் நடத்திய சுற்றிவளைப்பு சர்வதேச அளவில் கடும் கண்டனத்திற்கு காரணமானது.
தற்போது முன்னெடுத்துள்ள சுற்றிவளைப்பை கண்டித்திருக்கும் காசாவின் ஹமாஸ் அரச ஊடக அலுவலகம், ‘டாங்கிகள், ஆளில்லா விமானங்கள் மற்றும் ஆயுதங்களுடன் அல் ஷிபா மருத்துவ வளாகத்திற்குள் ஊடுருவியதாகவும் அங்கு சூடு நடத்தியது ஒரு போர் குற்றமாகும்’ என்றும் தெரிவித்துள்ளது.
இதன்போது மருத்துவமனை வளாகத்திற்குள் நடத்திய தாக்குதலில் பல டஜன் பேர் கொல்லப்பட்டிருப்பதாக மருத்துவ வட்டாரங்களை மேற்கோள்காட்டி பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டுள்ளது.
மருத்துவமனை வளாகத்தின் வாயில் பகுதியில் தீ பரவியதால் அங்கு இடம்பெயர்ந்து இருக்கும் பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட பலரும் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது. அங்கு சுமார் 30,000 இடம்பெயர்ந்த மக்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் நிலையில் தொலைத்தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இஸ்ரேலியப் படை விசேட சத்திரசிகிச்சை கட்டிடம் மற்றும் அவசர வரவேற்பு கட்டடத்திற்குள் ஊடுருவி அங்கு நகரும் அனைவர் மீதும் சூடு நடத்தி இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஜன்னல் பகுதியை நெருங்கும் அனைவர் மீதும் இஸ்ரேலிய துருப்புகள் சூடு நடத்தியதால் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கும் மருத்துவ குழுக்களுக்கு முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக வபா குறிப்பிட்டுள்ளது.
இதில் பலர் கொல்லப்பட்டிருப்பதாக மருத்துவமனைக்கு அருகில் இருப்பவர்களிடம் இருந்து தகவல் கிடைத்தது என்று காசா சுகாதார அமைச்சு கூறியது. ‘கடுமையான துப்பாக்கிச் சூடு மற்றும் பீரங்கி தாக்குதல்கள் காரணமாக யாரையும் மருத்துவமனைக்குள் அழைத்துச் செல்ல முடியாதுள்ளது’ என்று அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
போருக்கு முன்னர் காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையாக இருந்த அல் ஷிபா, வடக்கு காசாவில் பகுதி அளவு மாத்திரம் இயங்கும் ஒரு மருத்துவ பராமரிப்பு நிலையமாக மாறியுள்ளது.
‘திடீரென்று வெடிப்புகள் மற்றும் குண்டு சத்தங்கள் கேட்டதோடு, உடன் டாங்கிகள் வர ஆரம்பித்தன. அவை மேற்குப் பாதையான அல் ஷிபாவை நோக்கி வந்த நிலையில் துப்பாக்கி மற்றும் வெடிப்புச் சத்தங்கள் அதிகரித்தன’ என்று மருத்துவமனையில் இருந்து ஒரு கிலோமீற்றர் சுற்று வட்டத்தில் இருக்கும் இரு குழந்தைகளின் தந்தையான முஹமது அலி ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
இந்நிலையில் காசா நகரில் உள்ள இந்த மருத்துவமனையை சூழ இஸ்ரேல் இராணுவம் புதிய துண்டுப்பிரசுரத்தை வீசியுள்ளது.
‘ரிமாலில் இருப்பவர்கள் மற்றும் இடம்பெயர்ந்த அனைவரும் மற்றும் அல் ஷிபா மற்றும் அதற்கு அருகாமையில் இடம்பெயர்ந்திருக்கும் அனைவருக்குமானது: நீங்கள் ஆபத்தான போர் வலயத்தில் உள்ளீர்கள். பயங்கரவாத கட்டமைப்பை அழிப்பதற்கு இஸ்ரேலிய பாதுகாப்பு படை குடியிருப்பு பகுதியில் கடுமையாக செயற்படுகிறது’ என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் கரையோர வீதியை பயன்படுத்தி தெற்கு காசாவில் உள்ள அல் மவாசிக்கு செல்லும்படி அந்த அறிவித்தலில் உத்தரவிடப்பட்டுள்ளது.
இஸ்ரேல் தனது இராணுவ இலக்குகளை அடைய முடியாததன் குழப்பம், அவநம்பிக்கையை வெளிப்படுத்துவதாகவே இந்த மருத்துவமனை மீதான சுற்றிவளைப்பு உள்ளது என்று ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. ‘பாதுகாப்பு இன்றி இருக்கும் பொதுமக்களை இலக்கு வைப்பதைத் தவிர, எந்த ஒரு இராணுவ அடைவையும் எட்ட முடியாத குழப்பம் மற்றும் அவநம்பிக்கையை அவர்கள் வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளனர்’ என்று ஹமாஸ் கூறியது.
அல் ஷிபா மருத்துவமனை மாத்திரம் அன்றி இடம்பெயர்ந்த குடும்பங்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் பாடசாலை ஒன்றிலும் சுற்றிவளைப்பு தேடுதலை நடத்திய இஸ்ரேலிய இராணுவம் பலரை கைது செய்ததாக குடியிருப்பாளர்கள் மற்றும் ஹமாஸ் ஊடகம் குறிப்பிட்டது. கடற்கரை அகதி முகாம் ஒன்றின் விளிம்பிலும் டாங்கிகள் செயற்பட்டு அருகில் இருக்கும் சில கட்டடங்கள் மீது செல் குண்டுகளை வீசியதாகவும் குடியிருப்பாளர்கள் குறிப்பிட்டனர்.
13,000 சிறுவர்கள் பலி
காசாவில் தொடர்ந்து தாக்குதல்கள் நீடித்து வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் குறைந்தது 81 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு மேலும் 116 பேர் காயமடைந்திருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது. இந்தக் காலப்பிரிவில் எட்டு படுகொலை சம்பவங்கள் இடம்பெற்றதாகவும் அது சுட்டிக்காட்டியது.
இதன்படி கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக இடம்பெற்று வரும் இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதலில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 31,726 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 73,792 பேர் காயமடைந்துள்ளனர். இதில் சுமார் 8,000 பேர் காணாமல்போயிருப்பதாக நம்பப்படும் நிலையில் இவர்கள் உயிரிழந்த நிலையில் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
கொல்லப்பட்ட பலஸ்தீனர்களில் 70 வீதத்துக்கும் அதிகமானவர்கள் பெண்கள் மற்றும் சிறுவர்கள் என்று சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி போர் வெடித்தது தொடக்கம் காசாவில் இஸ்ரேல் 13,000க்கும் அதிகமான சிறுவர்களை கொன்றிருப்பதாகவும் மேலும் பலர் அழக்கூட சக்தி இல்லாத அளவுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் ஐக்கிய நாடுகள் சிறுவர்கள் நிதியமான யுனிசெப் குறிப்பிட்டுள்ளது.
‘மேலும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர் அல்லது அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதை எங்களால் தீர்மானிக்க முடியவில்லை. அவர்கள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருக்கலாம். உலகில் வேறு எந்த மோதலிலும் இந்த அளவு சிறுவர்களின் உயிரிழப்பை நாம் கண்டதில்லை’ என்று யுனிசெப் பணிப்பாளர் நாயகம் கெதரின் ரசல், சி.பி.எஸ். நியுஸ் தொலைக்காட்சிக்கு குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் ஹமாஸுடனான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக்காக இஸ்ரேல் உளவுப் பிரிவான மொசாட் தலைவரின் தலைமையில் இஸ்ரேலிய தூதுக் குழு ஒன்று கட்டார் சென்றிருக்கும் நிலையில் இந்தப் பேச்சுவார்த்தைக்கு குறைந்தது இரண்டு வாரங்கள் எடுத்துக் கொள்ளும் என்று இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதில் காசாவில் தொடர்ந்து பிடித்து வைக்கப்பட்டிருக்கும் சுமார் 100 இஸ்ரேலிய பணயக்கைதிகளில் 40 பேரை விடுவிப்பதற்கு பகரமாக ஆறு வார போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்த இஸ்ரேல் எதிர்பார்ப்பதாக அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் கட்டாரில் இருக்கும் ஹமாஸ் பிரதிநிதிகள் காசாவை தளமாகக் கொண்ட அந்த அமைப்பின் உறுப்பினர்களுடன் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதில் இருக்கும் சவால்கள் பேச்சுவார்த்தையை தாமதப்படுத்துவதாக இஸ்ரேலிய அதிகாரி குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே காசாவில் நிரந்தர போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்தும் வகையில் ஹமாஸ் அமைப்பும் கடந்த வாரம் போர் நிறுத்த பரிந்துரை ஒன்றை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.