பெல்ஜியமும் இந்தியாவும் பல்வேறு துறைகளிலும் இரு தரப்பு நட்புறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தியுள்ளன. இது தொடர்பில் பெல்ஜியப் பிரதமர் அலெக்சாண்டர் டி குரூவும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்துரையாடியுள்ளனர்.
பெல்ஜியம் அதன் முதலாவது அணுசக்தி உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடாத்தியுள்ளதையொட்டி இந்தியப் பிரதமர் அந்நாட்டு பிரதமரைத் தொலைபேசி ஊடாகத் தொடர்பு கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்து பாராட்டியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து இருபக்க நட்புறவை மேலும் மேம்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் கலந்துரையாடியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேநேரம் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையை தற்போது பெல்ஜியம் வகிக்கிறது. இக்காலப்பகுதியில் இந்தியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான மூலோபாயக் கூட்டாண்மையை மேலும் மேம்படுத்துவதற்கும் இரு தலைவர்களும் தங்கள் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர்.
பிராந்திய மற்றும் உலகளாவிய நெருக்கடிகள் குறித்தும் இச்சமயம் இந்திய மற்றும் பெல்ஜியப் பிரதமர்கள் கருத்து பரிமாறிக்கொண்டனர்.