தாய் – சேய் ஆரோக்கிய மேம்பாட்டுக்கான வேலைத்திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதன் பயனாக இந்தியாவில் தாய்மார் இறப்பு வீதத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ருசிரா காம்போஜ் தெரிவித்துள்ளார்.
167 சதவீதமாகக் காணப்பட்ட இந்தியாவின் தாய்மார் இறப்பு வீதம் தற்போது 97 வீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், பெண்களுக்கான ஆரோக்கிய துவாய்களுக்கு 100 சதவீதம் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும், அரசாங்கம் நடாத்தும் நிலையங்களில் இந்தத் துவாய்கள் ஒரு ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
பெண்களின் நிலை குறித்த ஆணைக்குழு ஏற்பாடு செய்திருந்த விஷேட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர், 2047 இல் முழுமையாக அபிவிருத்தி அடைந்த நாட்டை கட்டியெழுப்புவதே பிரதமர் நரேந்திர மோடியின் எதிர்பார்ப்பாகும். அந்த அபிவிருத்திக்கு பெண்களின் முழுமையானதும் சமமானதுமான பங்களிப்பு மிகவும் அவசியம். அதனால் பெண்கள் தலைமையிலான அபிவிருத்தித்திட்டங்களுக்கு கூடுதல் உதவி ஒத்துழைப்பு அளிக்கப்படுகின்றன.
ஜி20 நாடுகள் அமைப்பின் தலைமையை இந்தியா வகித்த போது, பாலின சமத்துவம் தொடர்பில் ஆறு சர்வதேச மாநாடுகளும் 86 மெய்நிகர் கூட்டங்களும் நடாத்தப்பட்டுள்ளன. இந்தியாவின் அபிவிருத்திக்கு பெண்களின் ஆக்கபூர்வ பங்கேற்பை அங்கீகரித்துள்ள இந்தியா, நாட்டின் அபிவிருத்தியில் அவர்கள் பங்காளர்களாகத் திகழ வேண்டும் என்ற நிலைப்பாட்டையும் கொண்டுள்ளது.
இந்தப் பின்புலத்தில் பெண்களின் உடல்நலம், பாதுகாப்பு, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முயற்சியாண்மை என்பன குறித்து பல வேலைத்திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன. அவை பாலின நீதி, சமத்துவத்தையும் இந்தியாவின் சமூக-பொருளாதார, அரசியல் மற்றும் கலாசார பரப்பையும் வடிவமைப்பதில் பெண்களின் முழுமையான பங்களிப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
எமது புதிய கல்வி கொள்கையானது தேவையை அடிப்படையாகக் கொண்ட கல்வியையும் பாலின சமத்துவ பாடவிதானத்தையும் ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது. அதனால் உயர்கல்வியில் பெண்கள் மற்றும் ஆண்களின் மொத்த உள்வாங்கலில் சமத்துவம் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.