உலகின் பணக்காரர் பட்டியலில் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க்கை முந்தி அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். 2021ஆம் ஆண்டு உலகின் பணக்காரர் பட்டியலில் ஜெப் பெசோஸ் முதலிடத்தில் இருந்தார். 2023ஆம் ஆண்டு அவரை முந்தி எலான் மஸ்க் முதலிடம் பிடித்தார். இந்நிலையில் உலக பணக்காரர்கள் குறித்த புதிய பட்டியலை ‘புளூம்பெர்க்’ நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 200 பில்லியன் டொலர் சொத்துகளுடன் ஜெப் பெசோஸ் மீண்டும் முதலிடத்தில் உள்ளார். எலான் மஸ்க் 198 பில்லியன் டொலர்களுடன் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். ஒரு கட்டத்தில் எலான் மஸ்க்–பெசோஸ் இடையிலான சொத்து மதிப்பு வித்தியாசம் 142 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்தமை குறிப்பிடத்தக்கது. 197 பில்லியன் டொலர் சொத்துகளுடன் ஆடம்பர பொருட்கள் தயாரிக்கும் லூயி வுய்டன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பெர்னார்ட் அர்னால்ட் 3ஆவது இடத்திலும் 179 பில்லியன் டொலர் சொத்துகளுடன் மெடா தலைவர் மார்க் சக்கர்பெர்க் 4ஆவது இடத்திலும், 150 பில்லியன் டொலர் சொத்துகளுடன் மைக்ரோசொப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் 5ஆவது இடத்திலும் உள்ளனர்.