பொலிஸ் உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கு அமையவே பாடசாலை மாணவர்களை பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்று, விசாரணைகளை முன்னெடுத்தோம் என தெல்லிப்பழை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் அண்மையில் நடத்தப்பட்ட இல்ல மெய்வல்லுனர் போட்டியின்போது, கார்த்திகை பூ அலங்காரம் செய்யப்பட்டமை தொடர்பில், மாணவர்கள் மற்றும் பாடசாலை நிர்வாகத்தினரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இது தொடர்பில் ஆசிரியர் சங்கத்தினால் மனிதவுரிமை ஆணைக்குழுவிடம் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
முறைப்பாட்டுக்கமைய, விசாரணைகளை முன்னெடுத்த மனிதவுரிமை ஆணைக்குழு, பொலிஸாரின் வாக்கு மூலத்தினை பெறுவதற்காக, தெல்லிப்பழை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை கடந்த வெள்ளிக்கிழமை, மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டது.
அதற்கிணங்க, யாழ். மனித உரிமை ஆணைக்குழுவில் முன்னிலையான பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவர், பொறுப்பதிகாரி விடுமுறையில் இருப்பதாகக் கூறி சம்பவம் தொடர்பிலான வாக்கு மூலத்தை வழங்கியுள்ளார்.
எனினும் குறித்த வாக்குமூலத்தில், தமக்கு பொலிஸ் உயர் அதிகாரிகள் வழங்கிய அறிவுறுத்தலின் பிரகாரமே மாணவர்களை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து விசாரணை செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
வாக்கு மூலங்களை பதிவு செய்துள்ள மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர், சம்பவம் தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.