பூநகரி பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ளதாக கூறப்படும் உத்தேச தொழிற்பேட்டைகளால் மக்களுக்கோ, சுற்றுச்சூழலுக்கோ எவ்வித பாதிப்புகளும் இல்லையென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு சாதகமான பதில் கிடைக்கும் பட்சத்திலேயே,அப்பகுதிக ளில் தொழில்பேட்டை அமைக்கப்படும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.பூநகரி, பொன்னாவெளி பிரதேசத்தில் சீமெந்து தொழிற்சாலை உள்ளிட்ட பல முதலீட்டுத் திட்டங்களை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் சுற்றுச் சூழலுக்கும் பிரதேச மக்களுக்கும் ஏற்படக்கூடிய சாதக, பாதகங்கள் தொடர்பாக ஆராயும் மக்களுடனான கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் (30) நடைபெற்றது.
பூநகரி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற இக் இக்கலந்துரையாடலில், சமூகப் பிரதிநிதிகள், பொதுமக்கள், துறைசார் அதிகாரிகளெனப் பலர் கலந்துகொண்டு கருத்தக்களை தெரிவித்தனர்.
பூநகரி, பொன்னாவெளி பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ள தொழிற்சாலைகள் மற்றும் முதலீடுகளால் மக்கள் பாதிக்கப்படக் கூடாது.சுற்றுச்சுழலுக்கு பாதிப்பு ஏற்படாமல் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவது அவசியம்.எனவே,விஞ்ஞான ரீதியில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, சாதக அறிக்கைகள் கிடைத்தால் மாத்திரமே திட்டம் நடைமுறைப் படுத்தப்பட வேண்டும்.இவ்வாறு பொது மக்கள் அமைச்சரிடம் தமது நிலைப்பாடுகளை வௌிப்படுத்தினர்.
பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிந்த அமைச்சர் மேலும் கூறுகையில் –
வடக்கில் பூநகரி நகரை ஒரு பொருளாதார நகரமாக உருவாக்கும் முயற்சியாகவே சீமெந்து தொழிற்சாலை, காற்றலை மின் உற்பத்தி, சுண்ணக்கல் அகழ்வு. கடற்பாசி வளர்ப்பு, கடலட்டைப் பண்ணை உள்ளிட்டபல திட்டங்களை முன்னெடுக்க திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
ஆனால், அவற்றை நடைமுறைப்படுத்தும் முன்னர் அப்பகுதியில் வாழும் மக்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டியது அவசியமாகும். அதன்படியே பிரதேச மக்களின் கருத்துக்களை கேட்டறிய கூட்டம் நடத்தப்படுகிறது.
அத்துடன் இங்கு உங்களது கருத்தக்களே முதன்மை பெறும். இது உங்களது பிரதேசத்தின் பொருளாதார வளர்சிக்கான ஒன்றாகும். ஆனாலும்,இதன் சாதக பாதகங்கள் ஆராயப்படுவது அவசியமாகும். இத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து மக்களின் கருத்தக்களுக்கே முன்னுரிமை வழங்கப்படுகிறது.எதுவானாலும்,மக்களின் நலனுக்கே முன்னுரிமையளிக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.