வீதிகளில் அதிக புகையை வெளியேற்றும் வாகனங்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படும் என்று மோட்டார் வாகனங்களின் வாகன உமிழ்வு சோதனை மையம் அறிவித்துள்ளது.
இவ்வாறான வாகனங்கள் தொடர்பான முறைப்பாடுகளை 070 3500 525 என்ற WhatsApp இலக்கத்திற்கு அனுப்ப முடியும் என, மையத்தின் பணிப்பாளர் தசுன் கமகே அறிவித்துள்ளார்.
வாகன சாரதிகள் தமது வாகன வருமான அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்காக புகை சான்றிதழை பெற்றுக்கொள்ள வேண்டும் என கமகே வலியுறுத்தியுள்ளார்.
எனினும் சிலர் நேர்மையற்ற முறையில் சான்றிதழைப் பெற முயற்சித்தாலும், பொலிஸ் மற்றும் மோட்டார் வாகனத் திணைக்கள அதிகாரிகள் நாடு முழுவதும் முழுமையான சோதனைகளை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாகனம் ஒன்று, அதிக புகை வெளியிடுவது அவதானிக்கப்பட்டால் வாகன உரிமையாளருக்கு பராமரிப்பு உத்தரவு வழங்கப்படும்.
எனினும் அந்த பிரச்சினைக்கு உரிமையாளர் தீர்வு காணாவிட்டால், குறிப்பிட்ட வாகனத்திற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் மோட்டார் வாகனங்களின் வாகன உமிழ்வு சோதனை மையத்தின் பணிப்பாளர் எச்சரித்துள்ளார்.