யாழ். ஊர்காவற்துறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட புளியங்கூடல் முத்து விநாயகர் ஆலயத்தின் சுமார் 60 பவுண்களுக்கு மேற்பட்ட நகைகள் காணாமல் போனமை தொடர்பில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புளியங்கூடல் சந்தியில் இருந்து ஆரம்பமான குறித்த மக்கள் பேரணி, பிரதான வழியாக இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் முத்து விநாயகர் ஆலயத்தை சென்றடைந்தது.
ஆலயத்தின் முகவாயிலில், 'பிள்ளையாரின் நகை பணம் திருடியவனை வீதிக்கு கொண்டுவா' போன்ற கோஷங்களை எழுப்பியவாறு ஆண் பெண் இருபாலரும் சிதறு தேங்காய் உடைத்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
எமது ஆலயத்தில் இடம்பெற்ற சம்பவம் ஒரு திருட்டு சம்பவமாக கருதும் நிலையில் குறித்த நகைகளையும் பணங்களையும் திருடியவர்கள் ஆலய நிர்வாகத்தில் உள்ளவர்கள் தான் என்ற சந்தேகம் எமக்கு ஏற்பட்டுள்ளது.
ஏனெனில் திறப்பை காணவில்லை என்றபோது, எல்லோரையும் அழைத்து குறித்த பெட்டியை உடைத்து அதில் இருந்த நகைகள் பணங்களை ஆலய நிர்வாகம் எடுத்து பாதுகாப்பாக வேறொரு திறப்பை போட்டிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை.