நமக்கு சொந்தமான புராதன பொக்கிஷங்களை மீண்டும் கொண்டு வர நாங்கள் பணியாற்றி வருகிறோம் என்று புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,ஐக்கிய இராச்சியத்தினால் நாட்டிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட தாரா சிலை உட்பட பல தொல்பொருட்கள் மீண்டும் நாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளன.
மேலும் நெதர்லாந்தில் இருந்து இதேபோன்ற பல பொருட்களையும் நாங்கள் பெற்றுள்ளோம்.
நாட்டுக்கும் கலாசாரத்துக்கும் ஏற்ற கல்வி முறையொன்று மக்கள் மனதில் தமது நாட்டை பற்றிய பெருமிதத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
பௌத்த சமய பெண் தெய்வமான தாராவின் சிலை, இலங்கையின் 7- 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தங்க முலாம் பூசப்பட்ட ஒரு வெண்கலச் சிலையாகும்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரித்தானியர் கண்டியின் கடைசி மன்னரை வென்று கண்டி இராச்சியத்தை கைப்பற்றினர்.
அப்போது இலங்கையின் பிரித்தானிய தேசாதிபதியாக இருந்தவர் ராபர்ட் பிரௌன்ரிக் தாரா சிலையை கொண்டு சென்றார்.
பின்னர் இச்சிலையை இவர் 1830 இல் பிரித்தானிய அருங்காட்சியகத்துக்கு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.