ஜனாதிபதித் தேர்தலைத் தடுப்பதற்காக சிலர் தொடர்ந்தும் நீதிமன்றத்தை நாடுவதாக கூறியுள்ள நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச , நீதித்துறையை கேலிக்கூத்தாக்க வேண்டாம் என சம்பந்தப்பட்டவர்களிடமும், சட்டத்தரணிகளிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் சர்வஜன வாக்கெடுப்பு மூலம் அங்கீகரிக்கப்படும் வரை ஜனாதிபதி தேர்தலை பிரகடனப்படுத்துவதை தடுக்குமாறு, ஒருவர் தாக்கல் செய்த மனு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இந்த கோரிக்கையை விடுத்தார்.
இறுதி பதினோராவது மணித்தியாலத்தில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் வாக்காளர்கள், மக்கள் மற்றும் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் சதித்திட்டம் தீட்டப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அழகப்பெரும குற்றம் சுமத்தினார் .
இந்தநிலையில், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு நான்கு நாட்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் கிடைக்கும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத்தின் பதவிக் காலத்தை ஐந்தாண்டுகளாக மட்டுப்படுத்துவதற்காக 2015ஆம் ஆண்டு ஆணைக்கு அமைவாக 19ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டது.
உயர் நீதிமன்றத்தின் அவதானத்துடன் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டதாகவும் அமைச்சர் ராஜபக்ச சுட்டிக்காட்டினார்.
இதன்படி, 19இன் படி எந்த ஒரு ஜனாதிபதியும் ஐந்தாண்டுகளுக்கு மேல் அதிகாரத்தைப் பயன்படுத்த முடியாது.
எனினும் சிலர் தங்களின் விருப்பத்துக்கு ஏற்ப நீதித்துறையை கேலி செய்யும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
அத்துடன் சட்டத்தை அறிந்த மக்களும் சட்டத்தரணிகளும் கூட வெட்கமின்றி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்கின்றனர்.
எனவே நீதித்துறையை மக்களும் சட்டத்தரணிகளும் கேலி செய்யக்கூடாது.
அரசியல்வாதிகளும் ஒரு நாளாவது அதிகாரத்தில் நீடிக்கக் கூடாது. 'நாய் குறி' என்று குறியிடப்படுவதற்கு முன்பு நாங்கள் வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்பது பழமொழி என்றும் விஜயதாச ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.