முல்லைத்தீவு கரைதுறைபற்று பிரதேச செயலகத்தில் நேற்று ஆடிப்பிறப்பை வரவேற்கும் நிகழ்வுகள் நடைபெற்றிருந்தன.
தமிழர்களின் பாரம்பரியம் மிக்க ஆடிப் பிறப்பை வரவேற்கும் நிகழ்வாக ஆடிக்கூழ் காய்ச்சி பரிமாரி உண்ணுதல் அமைந்துள்ளது.
கரைதுறைபற்று பிரதேச செயலகத்தில் கிராமசேவகர் உள்ளிட்ட பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்களின் பங்கேற்புடன் ஆடிப்பிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றது வரவேற்கத்தக்க விடயமாகும்.
இந்நிலையில், அரச உத்தியோகத்தர் தமக்கிடையே நல்லுறவையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்திக் கொள்ளும் போது மக்களுக்கான சேவைகளை விரைந்தும் வினைத்திறனோடும் வழங்க முடியும்.
அதற்கான அடித்தளத்தை இத்தகைய ஒன்றிணைந்த செயற்பாடுகள் உருவாக்கி விடும் என இது தொடர்பில் உளவளத்துணை ஆலோசகர் ஒருவருடனான உரையாடலின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார் என்பது நோக்கத்தக்கது.
மாதங்களின் பிறப்போடு தமிழர்களின் பண்பாடு பின்னிப்பிணைந்து உள்ளது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தை மாதப்பிறப்பு தொடர்பாக உருவாக்கப்பட்ட சொற்றொடர்.
தை மாதம் பிறப்பதை தைப்பொங்கலாக கொண்டாடுகின்றனர். அது போலவே சித்திரை மாதப் பிறப்பை சித்திரைப் புத்தாண்டாக தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர். அதன் தொடர்சியாக ஆடிமாதப் பிறப்பை கூழ் காய்ச்சி கொண்டாடி மகிழ்ந்து வரவேற்கின்றனர் என தமிழ் பண்பாடு மாதங்களோடு பின்னிப் பிணைந்துள்ளது என்பதை எடுத்துரைக்கின்றார் ஓய்வுபெற்ற தமிழ் பாட ஆசிரியர்.
கரைதுறைபற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்றிருந்த ஆடிப் பிறப்பு நிகழ்வுகள் தொடர்பில் அவரிடம் மேற்கொண்ட கருத்துக் கேட்டல்களின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.
இந்த அணுகுமுறை வரவேற்கத்தக்கது. மகிழ்சியளிப்பதாக இருக்கின்றது. பிரதேச செயலகத்தின் வெவ்வேறு பகுதிகளில் பணியாற்றும் அணைவரும் ஒரு குடும்ப நிகழ்வொன்றில் கூடி நின்று வேலை செய்யும் உறவினர்கள் போன்று பணியாற்றியிருப்பது நிச்சயமாக அவர்களிடத்தில் உணர்வுரீதியாக நல்ல பல மாற்றங்களை ஏற்படுத்தி விடும்.
வேலைப் பளுவுக்கு மத்தியிலும் இன்றைய பொருளாதார நெருக்கடிக்குள்ளும் இவ்வாறான நிகழ்வுகளை நெறிப்படுத்தி ஒழுங்கமைத்துக் கொடுக்கும் பிரதேச செயலாளரை குறிப்பிட்டு பாராட்டிய பலரை சந்திக்க முடிந்ததும் நோக்கத்தக்கது.
ஒரு பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள் மத்தியில் ஒற்றுமையாக செயற்படுதலையும் வேலைப்பகிர்வையும் ஏற்படுத்துவதில் ஆடிப்பிறப்பு நிகழ்வு போன்ற இவ்வாறான செயற்பாடுகள் நல்ல களமாக அமைந்து விடுகின்றன என்றால் அது மிகையில்லை.