காஸா சிட்டியின் இரண்டு மாவட்டங்களில் இருந்து இஸ்ரேல் ராணுவம் வெளியேறியுள்ள நிலையில், டசின் கணக்கான பாலஸ்தீன மக்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹமாஸ் படைகளுக்கு எதிராக ஒருவார காலம் நீடித்த தீவிர நடவடிக்கைகளை அடுத்து இஸ்ரேல் ராணுவம் காஸா சிட்டியின் இரண்டு மாவட்டங்களில் இருந்து வெளியேறியுள்ளது.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை ஹாமாஸ் படைகளின் சிவில் பாதுகாப்பு அமைப்பு வெளியிட்டுள்ள தகவலில், Tal al-Hawa மற்றும் Al-Sinaa மாவட்டங்களில் இருந்து சுமார் 60 சடலங்கள் வரையில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், குண்டு வீச்சில் சேதமடைந்துள்ள குடியிருப்புகளின் இடிபாடுகளில் சிக்கி மேலும் பலர் மரணமடைந்திருக்கலாம் என்றும், அவர்களை மீட்பது சவாலான விடயம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் இந்த மாவட்டங்களில் தாக்குதல் தொடங்கிய முதல் நாளில் இருந்தே அதிக எண்ணிக்கையிலான மக்கள் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், உதவி கேட்டு பலர் தொடர்பு கொள்வதாகவும், ஆனால் தங்களால் அப்பகுதிக்கு செல்ல முடியாத சூழல் இருப்பதாகவும்,
போதுமான ஊழியர்கள் தங்களிடம் இல்லை என்றும் சிவில் பாதுகாப்பு அமைப்பு நிர்வாகிகள் குறிப்பிட்டுள்ளனர். இதனிடையே, 60,000 பாலஸ்தீனியர்களை கவனித்து வந்த சபா மருத்துவ மையம் இஸ்ரேல் தாக்குதலில் மொத்தமாக சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் இஸ்ரேல் தரப்பால் இதுவரை இந்த விவகாரம் உறுதி செய்யப்படவில்லை. புதன்கிழமை துண்டுப்பிரசுரங்களை வினியோகித்த இஸ்ரேல் ராணுவம், காஸா சிட்டியில் இருந்து பாலஸ்தீன மக்கள் உடனடியாக பாதுகாப்பான பகுதி நோக்கி இடம்பெயர வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால், இஸ்ரேல் வகுத்துள்ள பாதுகாப்பான பகுதி என்பதில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றே காஸா மக்கள் தெரிவித்துள்ளனர்.