அம்பானி வீட்டு மணமக்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க இந்திய பிரதமர் மோடி வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இவர்களுக்கு 2023 -ம் ஆண்டு ஜனவரியில் மும்பையில் உள்ள அன்டாலியா இல்லத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. கோலாகலமாக நடைபெற்ற 'சங்கீத்' விழாவில் சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் பிரபலங்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இவர்களின் திருமணம் நேற்று (ஜூலை 12 -ம் திகதி) ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் உள்ள பிரமாண்ட வளாகத்தில் நடைபெற்றது. திருமணத்தை தொடர்ந்து அடுத்த இரண்டு நாட்களுக்கு திருமண கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன.
இத்திருமணத்திற்கு இந்திய தலைவர்கள் முதல் சர்வதேச தலைவர்கள் வரை அழைப்பு விடுக்கப்பட்டது. அந்தவகையில், நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்துடன் அம்பானி வீட்டு திருமண நிகழ்வில் கலந்து கொண்டார்.
இயக்குநர் அட்லீ மற்றும் அவரது மனைவி, நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
மேலும், அரசியல் தலைவர்களான பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, தமிழ்நாட்டு முதலமைச்சர் ஸ்டாலின், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர்களுக்கும் திருமணத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி மணமக்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க இன்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நேற்று நடைபெற்ற ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்தில் பங்கேற்காத மோடி இன்று கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.