2023ஆம் ஆண்டு ஜூலை முதல் 2024 மார்ச் வரையான காலப்பகுதிக்குள் ஜப்பானில் ஸ்ட்ரெப்டோகாக்கல் பக்டீரியாவின் பாதிப்பு (STSS) காரணமாக ஐந்து கர்ப்பிணித் தாய்மார்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஸ்ட்ரெப்டோகாக்கல் டாக்ஸிக் ஷாக் சிண்ட்ரோம் (STSS) எனப்படும் குறித்த தொற்று மூக்கு அல்லது தொண்டை வழியாக பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த நோய் பரவலை தடுப்பதற்காக முகக்கவசம் அணியுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேநேரம், குறித்த நோய் தொற்று காரணமாக கடந்த ஆண்டில் 941 பேரும் இந்த ஆண்டில் 1,114 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், காய்ச்சல், குளிர், தசை வலி, குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவையே இந்த நோயின் முக்கிய அறிகுறிகள் என கூறப்பட்டுள்ளது.
பொதுவாக பாதிக்கப்பட்ட நபருக்கு குறைந்த இரத்த அழுத்தம் ஏற்பட 24 முதல் 48 மணிநேரம் மட்டுமே ஆகும்.
அதேவேளை, நோய் தீவிரமடையும் போது, குறைந்த இரத்த அழுத்தம் வேகமாக அதிகரித்து, உறுப்புகள் குறைவாக செயல்படலாம் எனவும் கூறப்படுகிறது.
அது மாத்திரமன்றி, சிறுநீர் கழிப்பதில் சிரமம், சிறுநீரக செயலிழப்பு, கல்லீரல் செயலிழப்பு, தோலில் இரத்தப்போக்கு அல்லது சிராய்ப்பு ஆகியன ஏற்படலாம். இல்லையெனில், தோல் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாக மாறவும் வாய்ப்புள்ளது.
மேலும், இந்நோய் பரவல் காரணமாக இரத்தம், சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல், தோல் மற்றும் மென்மையான திசுக்கள் ஆகியவை தொடர்புடைய பக்டீரியாக்களும் பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.