ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி எடுத்த தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் கிடையாது என கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கட்சியின் வேட்பாளர் ஒருவர் போட்டியிடுவார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கட்சியின் 92 உறுப்பினர்கள் சந்திப்பு நடத்தியிருந்ததாகவும், இதில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் இன்னமும் கட்சியுடன் இணைந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் என அறிவிக்கப்பட்டதன் காரணமாக இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியுடனான சந்திப்பில் பங்கேற்றதாக குறிப்பிட்டுள்ளார்.
ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் பிரசன்ன ரணதுங்க, இவ்வாறு அறிவித்துள்ளார் என சாகர காரியவசம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த சந்திப்பின் போது சில அமைச்சர்களும், சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாக கூறிய போதிலும், பெரும்பான்மையானவர்கள் அமைதியாக இருந்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 14ம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு முன்னர் தமது கட்சியின் வேட்பாளர், ஜனாதிபதி தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்வார் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியின் வேட்பாளரைத் தவிர்ந்த வேறு ஒருவருக்கு ஆதரவளித்தால் அவ்வாறானவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.