அவுஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் அடம் சம்பா தனது 100வது ஒருநாள் போட்டியில் விளையாடவுள்ளார்.
அவுஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ரி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கும் இடையிலான ரி20 தொடர் அண்மையில் நிறைவடைந்த நிலையில், ஒருநாள் தொடர் நாளை தொடங்குகிறது. இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அவுஸ்திரேலிய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மிட்செல் ஸ்டார்க்கை தவிர்த்து அடம் சம்பா மட்டுமே அவுஸ்திரேலியாவுக்காக 100வது ஒருநாள் போட்டியில் விளையாடவுள்ளார்.
இதுவரை 99 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அடம் சம்பா 169 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். மேலும், இங்கிலாந்துக்கு எதிராக 12 போட்டிகளில் 21.57 சராசரியில் 26 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
முன்னாள் அணிதலைவர் ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க்கைத் தொடர்ந்து, தற்போதைய அவுஸ்திரேலிய அணியில் சதத்தை எட்டிய மூன்றாவது வீரர் இவர் ஆவார்.