ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 57ஆவது கூட்டத் தொடர் ஆரம்பமாகியுள்ளது.
குறித்த கூட்டத்தொடரில் இன்றையதினம் மதியம் 12.30 மணிக்கு பின்னர் இலங்கை தொடர்பிலான விவாதம் எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் இன்று பிற்பகல் 5 மணிக்கு இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான நிலைமைகள் தொடர்பாகக் கலந்துரையாடும் பக்க நிகழ்வும் நடைபெறவுள்ளது.
இதனிடையே, இலங்கை தொடர்பான 51/1 தீர்மானத்தை மேலும் ஒரு வருடத்துக்கு நீடிப்பதற்கு வாய்ப்பு உள்ளதாக அறிய கிடைக்கின்றது.
இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளரின் விரிவான எழுத்துமூல அறிக்கை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டே பிரதான அமர்வில் இன்றையதினம் விவாதம் நடைபெறவுள்ளது.இலங்கை தொடர்பாக ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட 51/1 தீர்மானத்தின் ஆயுட்காலம் நிறைவடைகிறது. எனவே, இது விடயத்தில் மனித உரிமைகள் பேரவையின் அடுத்த கட்ட நகர்வு தொடர்பிலும் முடிவு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனிடையே, ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கைவிடும்படி இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது. எனினும், தற்போது நாட்டில் தேர்தல் நடப்பதால் மனித உரிமைகள் விவகாரம் அரசியல் மயமாக்கப்பட்டுவிடும் என்றும் மீண்டெழும் பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படும் எனவும் இலங்கை கூறியுள்ளது.
மேலும், இலங்கை தொடர்பில் புதிய பிரேரணை தொடர்பில் உத்தியோகபூர்வ தகவல் வெளியிடப்படவில்லை.
இதற்கமைய, இலங்கை தொடர்பில் ' இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்' என்ற தலைப்பில் 51ஆவது கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மீண்டும் ஓராண்டுக்கு நீடிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.