தேசிய மக்கள் சக்தி ஒரு மாற்றத்தை வேண்டி நிற்கும் தருணத்தில் தமிழரசுக் கட்சியானது ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கையினை விடுத்திருப்பது மன வருத்தைத் தரும் விடயமாகும்.
இது குறித்து அக்கட்சி மீள் பரிசீலனை செய்ய வேண்டும். அல்லது சில மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையினை தேசிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட செயற் குழு உறுப்பினர் கலாநிதி பி. பி. சிவப்பிரகாசம் விடுத்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு விளக்கமளிக்கும் போதே இவ்வாறு கலாநிதி பி. பி. சிவப்பிரகாசம் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து அங்கு கருத்துத் தெரிவிக்கையில் தமிழரசுக் கட்சியினர் ஐக்கிய மக்கள் சக்தியை ஆதரிப்பதற்குத் தீர்மானித்து இருக்கின்றார்கள்.அவ்வாறே அக்கட்சியினர் மக்களிடத்தில் கோரிக்கையினையும் விடுத்துள்ளனர்.தேசிய மக்கள் சக்தி அந்த நிலைப்பாடுகள் குறித்து ஆராய்ந்து வருகின்றன.
தேசிய மக்கள் சக்தியானது இன்று முழு நாட்டிலும் அதாவது வடக்கு, கிழக்கு, மலையகம் , தென்னிலங்கை மக்கள் உட்பட அனைவரையும் ஒருங்கிணைத்துக் கொண்டு செல்லுகின்ற புதிய ஜனநாயக அரசியல் பாதையை வேண்டி நிற்கின்றது.
இலங்கைக்கு ஒரு புதிய சுதந்திரத்தை வேண்டி நிற்கின்ற இந்த வேளையில் தமிழரசுக் கட்சியின் இந்த தீர்மானம் மன வருத்தத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கின்றது. தமிழரசுக் கட்சியின் தீர்மானத்திலே சில மாற்றத்தைக் கொண்டு வர வேண்டியிருக்கிறது.அல்லது அவர்கள் தங்களுடைய தீர்மானம் குறித்து மீள் பரிசீலனை செய்ய வேண்டும்.
இது எங்களுக்கு ஒரு ஆச்சரியத்தை ஊட்டுவதாகவே காணப்படுகின்றது.ஆனால் வடக்கு, கிழக்கில் வாழுகின்ற தமிழ் மக்கள்; இலங்கையிலுள்ள சகலவிதமான அரசியல் ரீதியிலான பிரச்சினைகளுக்கும் ஒரு புதிய தீர்வை அணுகுவதற்காக, ஒரு புதிய சுதந்திரத்தை அணுகுவதற்காக, அவர்கள் ஒரு மாற்றத்தை வேண்டி நிற்கின்றார்கள்.ஒரு மறுமலர்ச்சியை வேண்டி நிற்கின்றார்கள்.
அந்த அடிப்படையில் இன்று இந்த நாட்டில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தக் கூடிய ஒரே கட்சி தேசிய மக்கள் சக்தியே. ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயகவின் தெரிவிலே தான் இந்த நாட்டுக்கு மாற்றத்தைக் கொண்டு வரலாம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.