தென்னிந்தியாவின் கேரளா மாநிலத்தில் நிபா வைரஸால் 24 வயது மாணவர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிபா தொற்றானது எப்போது வேண்டுமானாலும் பெருந்தொற்றாக மாறும் வாய்ப்புள்ளதால் உலக சுகாதார அமைப்பானது முன்னுரிமை அளிக்கப்படும் நோய்க்கிருமியாக வகைப்படுத்தியுள்ளது.
மேலும் நிபா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி ஏதும் இல்லை என்பதுடன், குணப்படுத்தும் சிகிச்சையும் இல்லை. கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றில், கேரளாவின் சில பகுதிகள் உலகளவில் நிபா வைரஸ் பாதிப்புக்கு அதிக ஆபத்து உள்ளவையாக கண்டறியப்பட்டுள்ளது.
செப்டம்பர் 4ம் திகதி அந்த மாணவர் காய்ச்சல் அறிகுறிகளுடன் காணப்பட்டதாகவும், 5 நாட்களுக்கு பிறகு சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாகவும் உள்ளூர் மருத்துவ அதிகாரி ரேணுகா தெரிவித்துள்ளார்.
தற்போது மரணமடைந்த மாணவருடன் தொடர்புடைய 151 பேர்கள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மட்டுமின்றி, நிபா தொற்றுக்கு மரணமடைந்த மாணவர் பெங்களூருவில் இருந்து ஊருக்கு திரும்பியுள்ளார்.
கடந்த ஜூலை மாதம் 14 வயது சிறுவன் உயிரிழந்த பிறகு, இந்த ஆண்டு மலப்புரத்தில் நிபா நோய்த்தொற்றால் ஏற்பட்ட இரண்டாவது மரணம் இதுவாகும்.
2018ல் கேரளா மாநிலத்தில் முதல் முறையாக நிபா உறுதி செய்யப்பட்டதன் பின்னர் டசின் கணக்கானோர் மரணமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.