புதிய அரசாங்கத்தின் கீழ் பதில் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு சிரேஸ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வீரசூரிய பொலிஸ் கான்ஸ்டபிள் பதவியில் இருந்து சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பதவி வரையில் பதவி உயர்வுகளை பெற்றுக் கொண்ட திறமையான அதிகாரி என தெரிவிக்கப்படுகிறது.
அவர் இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் 36 வருட அனுபவத்தை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வட மத்திய மாகாணத்தின் பிரதி பொலிஸ்மா அதிபராக தற்பொழுது கடமையாற்றி வரும் அவர், இதற்கு முன்னதாக குற்ற மற்றும் மோட்டார் போக்குவரத்து பிரிவுகளுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபராகவும், வடக்கு மற்றும் மத்திய மாகாணங்களுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபராகவும், பொலிஸ் விநியோகப் பிரிவின் பனிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
1988 ஆம் ஆண்டு பொலிஸ் விசேட அதிரடிப்படையில் பொலிஸ் கான்ஸ்டபிளாக சேவையில் இணைந்து கொண்டார்.1992 ஆம் ஆண்டு உதவி பொலிஸ் பரிசோதகர் பதவிக்கு பதவி உயர்த்தப்பட்டார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டமானி பட்டத்தைப் பெற்றுக்கொண்டுள்ளதுடன், இலங்கை சட்டக் கல்லூரியில் கற்று சட்டத்தரணியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.இந்த தகவமைகளின் அடிப்படையில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் பதவிக்கு உயர்த்தப்பட்டார்.
மனிதவள முகாமத்துவம் வியாபார முகாமைத்துவம் உள்ளிட்ட துறைகளில் அவர் பட்டம் பெற்றுக் கொண்டுள்ளார்.
ஹெய்ட்டி மற்றும் கிழக்கு திமொர் போன்ற நாடுகளில் அமைதி காக்கும் பணிகளில் அவர் ஈடுபட்டுள்ளார்.
வீரசூரிய தான் பதவி வகித்த காலப்பகுதியில் 10 பொலிஸ் மா அதிபர்களிடம் சிறந்த சேவைக்காக பாராட்டு கடிதங்களை பெற்றுக் கொண்டுள்ளார்.
பதில் பொலிஸ்மா அதிபர் பதவிக்காக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்களான பிரியந்த வீர சூரிய மற்றும் லலித் பத்திநாயக்க ஆகியோருக்கு இடையில் போட்டி நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.