இலங்கையில் இணையம் மற்றும் வெளிநாட்டு விசா நடவடிக்கைகள் தொடர்பான அமைச்சரவை தீர்மானத்தை இடைநிறுத்திய உயர் நீதிமன்றத்தின் உத்தரவை நடைமுறைப்படுத்த தவறியமைக்காக நீதிமன்றில் நேரில் முன்னிலையாகுமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு, உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது
.
முன்னதாக, நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்து குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் அறிவித்துள்ளதாக, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக மன்றாடியார் நாயகம் விவேகா சிறிவர்தன நீதிமன்றில் தெரிவித்தார்.
நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல்
எனினும், நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறியது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும் என உயர்நீதிமன்ற நீதியரசர்களான பிரீத்தி பத்மன் சுரசேன, குமுதுனி விக்கிரமசிங்க, அச்சல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய மூன்று நீதியரசர்கள் கொண்ட அமர்வு தெரிவித்தது.
மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சஞ்சீவ ஜயவர்தன ஆகியோர், உயர் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறிய பிரதிவாதிக்கு எதிராக விதியை பிறப்பிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை, இதன்போது மீண்டும் வலியுறுத்தினர்.
இலங்கைக்கு விஜயம் செய்யும் சுற்றுலா பயணிகளுக்கு விசா வழங்குவதற்கான இலத்திரனியல் பயண அங்கீகார முறையை கையாளும் தனியார் நிறுவனங்களை கொள்வனவு செய்வதில், அதிகாரிகளால் நடைமுறை மீறல்கள் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையை துஷ்பிரயோகம் செய்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பல அடிப்படை உரிமைகள் மனுக்களுக்கு இணங்க, உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.