ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில், இந்தியதேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷ்யா செல்லவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இரு நாடுகள் இடையே அமைதியை ஏற்படுத்தும் முயற்சியாக இது அமையும் என கூறப்பட்டுள்ளது.
இதன்போது இரு நாடுகளின் முக்கிய தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.
ரஷ்யா - உக்ரைன் இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாகபோர் நீடிக்கிறது.
இருநாட்டு தலைவர்களிடமும் பிரதமர் நரேந்திர மோடி பல முறை போர் நிறுத்தம் தொடர்பில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரதமர் மோடி கடந்த 23ஆம் திகதி உக்ரைன் சென்றபோது, ‘‘ரஷ்யா - உக்ரைன் மோதல் விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகிக்கவில்லை.
இந்தியா எப்போதும் அமைதியின் பக்கம்தான் உள்ளது’’ என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
போர் நடவடிக்கையை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு திரும்புமாறும், இதில் உதவ இந்தியா தயாராக இருப்பதாகவும் ஜெலன்ஸ்கியிடம் மோடி உறுதிபட கூறினார்.
அப்போது, இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரும் சென்றிருந்தனர்.
உக்ரைன் படைகள் ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் ஊடுருவியதால், பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு இல்லை என ரஷ்ய அதிபர் புதின் ஏற்கெனவே கூறியிருந்தார்.
ஆனால், அவர் சமீபத்தில் அளித்த நேர்காணலில், ‘‘ரஷ்யா-உக்ரைன் இடையே அமைதியை ஏற்படுத்த இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள் உண்மையாக முயற்சி மேற்கொள்கின்றன.
அந்த நாடுகள் இதில் நடுவர்களாக செயல்பட முடியும். துருக்கியில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையில் நடைமுறைப்படுத்த ஒப்பந்தங்கள், இனிமேல் நடக்க உள்ள அமைதி பேச்சுவார்த்தைக்கு அடிப்படையாக இருக்கும் என்று கூறியிருந்தார்.