போதிய வசதி இல்லாத காரணத்தால் கிரிக்கெட் மைதானத்தை உலரவைக்க மின்விசிறியை பயன்படுத்தும் ஊழியரின் வீடியோ வைரலாகி வருகிறது.
இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் உள்ள நொய்டா கிரிக்கெட் மைதானத்தில் நேற்று முன்தினம் நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே டெஸ்ட் போட்டி நடைபெற இருந்தது.
ஆனால், மழையின் காரணமாக முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இதன்பின்னர், கிரிக்கெட் மைதானத்தில் தேங்கியிருந்த மழைநீரால் இரண்டாவது நாள் ஆட்டமும் ரத்து செய்யப்பட்டது.
இதனால், கிரிக்கெட் மைதானத்தில் உள்ள ஈரத்தை உலர வைப்பதற்காக மின்விசிறியை ஊழியர்கள் பயன்படுத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையாகியுள்ளது.
இந்நிலையில், நொய்டா கிரிக்கெட் மைதானத்தில் போதிய நவீன வசதிகள் இல்லை எனவும், பணியாளர்களுக்கு தகுந்த பயிற்சி இல்லை எனவும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகி அதிருப்தி தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல், கிரிக்கெட் போட்டியை காண சென்ற பெண்களுக்கு கழிவறை வசதிகள் கூட இல்லை எனவும் புகார் வந்துள்ளது.
கடந்த 2017 -ம் ஆண்டு முதல் இந்த மைதானத்தில் பல சர்வதேச போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணி விளையாடி வருவது குறிப்பிடதக்கது.