ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விவசாயிகளின் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய தீர்மானித்துள்ளார் என்று நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
யாப்பஹூவ பகுதியில் நேற்றையதினம் இடம்பெற்ற ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவான தேர்தல் பிரசாரக் கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,இலங்கையை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டெடுக்கும் வாய்ப்பு எமது அரசாங்கத்திற்கு கிடைத்தது. இன்று சஜித், அனுர போன்றவர்கள் வாக்கு கேட்கிறார்கள். அன்று அவர்கள் எரியூட்டிய நாட்டில் நெருப்பை அணைத்தவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மட்டுமே.
எனவே, இன்னும் ஐந்து வருடங்கள் ரணில் ஆட்சி நடந்தால் மட்டுமே இலங்கைக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும். இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விவசாயிகளின் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய தீர்மானித்துள்ளார்.
அதற்கான நிதியை தேடிக்கொள்ளும் இயலுமை இந்த அரசாங்கத்திற்கு உள்ளது என்பதையும் ஜனாதிபதி நிரூபித்துள்ளார்.
இலங்கைக்கு நிகராக சரிவடைந்த நாடுகள் இன்றும் தடுமாறும் வேளையில் இலங்கையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறுகிய காலத்தில் மீட்டிருக்கிறார்.
அதனால் அவரின் பொருளாதார கொள்கைகள் முன்னோக்கி கொண்டு சென்றால் மட்டுமே இலங்கைக்குப் பாதுகாப்பான எதிர்காலம் இருக்கும்.
மாற்று வழியில் ஓட முற்பட்டால் சர்வதேச உதவிகளை இழந்து தவிக்கும் நிலைக்கு இலங்கை தள்ளப்படும் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.