ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் வருகின்ற புதிய அரசாங்கத்துடன் அதிகாரப்பரவலாக்கத்துடன் கூடிய அரசியல் தீர்வு தொடர்பாக இணைந்து செயற்பட எதிர்பார்க்கின்றோம் என்று இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பட்ரிக் தெரிவித்துள்ளார்.
இலாப நோக்கற்ற நிறுவனம் ஒன்று கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடலில் பங்கேற்ற போதே அவர் இந்த விடயம் தொடர்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
"பிரித்தானியா பல வருடங்களாக அதிகாரப்பரவலாக்கத்துடன் கூடிய அரசியல்தீர்வு தொடர்பாக வலியுறுத்தி வருகிறது. பிரதான வேட்பாளர்கள் இந்த விடயம் தொடர்பில் தமது கொள்கைகளை வெளியிட்டுள்ளனர்.
பிரித்தானியாவுக்கு தெற்காசிய பிராந்தியம் முக்கியத்துவமிக்கது. எதிர்காலம் இங்கு முக்கியத்துவமிக்கதாக உள்ளது. இரண்டாவது ஏற்றுமதி வர்த்தக பங்காளராக தொடர்ந்தும் இருந்து வருகிறது.
சுற்றுலாத்துறையிலும் இலங்கையில் இரண்டாவது இடத்தை பிரித்தானிய சுற்றுலாப் பயணிகள் பெற்றுள்ளனர்.
மேலும், பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கத்துவம் வகிக்காததன் காரணமாக போன்ற நாடுகளுக்கு உதவும் நோக்கில், "அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கான வர்த்தக திட்டம்’’ என்ற செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது” என குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை குறிப்பாக அவர், "இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான உறவு முக்கியத்துவமிக்கது. பிரித்தானியா தொடர்ந்தும் இலங்கையிலிருந்து அதிக இறக்குமதிகளை செய்கிறது. இலங்கையின் ஏற்றுமதி பொருளாதாரத்தில் பிரித்தானியா இரண்டாவது இடத்தைப் பிடிக்கிறது.
சுற்றுலாத்துறை இலங்கையில் மிக முக்கியமான ஆற்றலை கொண்டிருக்கிறது. அதிலும் பிரித்தானியா இலங்கைக்கு சிறந்த பங்களிப்பை வழங்குகிறது. சட்டவிரோத குடியேற்றவாசிகளை ருவாண்டாவுக்கு அனுப்புகின்ற திட்டம் புதிய பிரித்தானிய அரசாங்கத்தினால் நிறுத்தப்பட்டுள்ளது. எந்தவொரு நாட்டுக்கும் இது தொடர்பான பிரச்சினை சவாலாகவே இருக்கும்.
அதிகமான மக்கள் 20ஆயிரம் டொலர்களுக்கும் அதிக பணத்தை கடத்தல்காரர்களுக்கு கொடுத்து பிரித்தானியாவுக்கு வர முயற்சிக்கின்றனர். இந்நிலையில், ஐ.நா. மனித உரிமை பேரவையின் புதிய அமர்வு நடைபெறவுள்ளது.
இதில் இணை அனுசரணை நாடுகள் குழு எவ்வாறான முடிவை எடுத்துள்ளது என்று தற்போது கூற முடியாது. ஆனால், இப்போது இலங்கையில் தேர்தல் காலம் என்பதால் தேர்தலின் பின்னர் இந்த விடயத்தில் செயற்படுவதற்கு புதிய கதவுகள் திறக்கப்படும் என்று நம்புகின்றோம்” என தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஜெனீவா கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் புதிய பிரேரணை கொண்டு வரப்படுமா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த உயர்ஸ்தானிகர், அதற்கு அமர்வு தொடங்கும் வரை காத்திருக்க வேண்டியது அவசியம் என தெரிவித்துள்ளார்.
இது இவ்வாறிருக்க அரசியல் தீர்வு தொடர்பில் வடக்கு - கிழக்கு மக்கள் மற்றும் தலைவர்கள் எவ்வாறான விடயங்களை உங்களிடம் தெரிவித்தார்கள் என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த உயர்ஸ்தானிகர், "இந்த விடயம் தொடர்பில் நான் மிகக் கவனமாக பேச வேண்டியிருக்கிறது.
ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் வருகின்ற புதிய அரசாங்கத்துடன் அதிகாரப்பரவலாக்கத்துடன் கூடிய அரசியல் தீர்வு தொடர்பாக இணைந்து செயற்பட எதிர்பார்க்கின்றோம்.
பிரித்தானியா பல வருடங்களாக அதிகாரப்பரவலாக்கத்துடன் கூடிய அரசியல்தீர்வு தொடர்பாக வலியுறுத்தி வருகிறது. பிரதான வேட்பாளர்கள் இந்த விடயம் தொடர்பில் தமது கொள்கைகளை வெளியிட்டுள்ளனர்” என்று வலியுறுத்தியுள்ளார்.