தெற்காசியாவில் முதன் முறையாக இலங்கையில் Air- Ship சேவையை ஆரம்பிக்கும் ஒப்பந்தம் சர்வதேச Air Space நிறுவனத்தின் தலைவர் ஷுகரேவ் செர்ஜி நிகோலாவிச்க்கும், கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்திற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையில் இன்று குறித்த ஒப்பந்தம்கைச்சாத்திடப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தின் சுற்றுலா துறையை மேலும் அபிவிருத்தி செய்யும் நோக்கில் இவ்வொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
திருகோணமலையில் உள்ள நிலாவெளி, மட்டக்களப்பில் உள்ள பாசிக்குடா, அம்பாறையில் உள்ள அருகம்பே போன்ற சுற்றுலா தளங்களின் இயற்கை அழகை ரசிக்கும் வகையிலும், பயணத்தை இலகுபடுத்தும் நோக்கிலும் பறக்கும் கப்பல் சேவை ஆரம்பிப்பது தொடர்பில் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.
உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க இவ்வேலைத்திட்டமானது எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் போது கருத்து தெரிவித்த சர்வதேச Air Space நிறுவனத்தின் தலைவர் ஷுகரேவ் செர்ஜி நிகோலாவிச், “இலங்கையில் உள்ள பல மாகாணங்களை ஒப்பிடும் போது,கிழக்கு மாகாணத்தில் கடந்த ஒன்றரை வருடமாக ஆளுநர் செந்தில் தொண்டமானால் கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத் துறையை அபிவிருத்தி செய்ய முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் வளர்ச்சி பாதையை நோக்கி செல்வதை அவதானிக்க முடிந்தது.
ஆளுநர் Air- Ship சேவையை ஆரம்பிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
அதற்கு அமைய கடந்த ஒரு மாத காலமாக எமது நிறுவனத்தின் அதிகாரிகள் இங்கு இருந்து இவ்வேலைத்திட்டம் குறித்து ஆராய்ந்தனர்.
எங்களுடைய ஆய்வு அறிக்கை படி இவ்வேலைதிட்டத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது என்பதை அறிந்து air ship வேலைத்த்திட்டத்திட்காக முழு முதலீடு செய்யவுள்ளோம்” என தெரிவித்துள்ளார்.