கிராதுருகோட்டை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட நபர் 3280 மில்லிகிராம் ஹெரோயினுடன் கல்போருயா பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது, நேற்று மாலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, கைது செய்யப்பட்ட நபர், 84 - கனிசம தொகுதி, கல்போருயா, கிராதுருகோட்டை என்ற முகவரியில் வசிக்கும் 30 வயதுடையவர் என தெரிய வந்துள்ளது.சந்தேக நபர், இதற்கு முன்னர் அந்த பகுதிகளில் பல்வேறு திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதுடன் பின்னர் கொழும்பு பகுதிக்கு சென்று அங்கிருந்து ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்களை கொண்டுவந்து கிராதுருகோட்டை பகுதியில் விற்பனை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய பொலிஸார் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது சந்தேக நபர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதற்கமைய, கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி பொலிஸ் காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ள உத்தரவை பெறுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.