இன்று பூமிக்கு வெறுமையாக திரும்பவுள்ள விண்கலம் காரணம் என்ன ?

tubetamil
0

சர்வதேச விண்வெளி மையத்துக்கு இந்திய வம்சாவளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸையும் மற்றும் ஒரு வீரரையும் அழைத்துச்சென்ற போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலம் அவர்கள் இல்லாமலேயே இன்று பூமிக்கு திரும்புகிறது.

சர்வதேச விண்வெளி மையத்திற்கு, விண்வெளி வீரர்களை அழைத்து செல்லவும், அங்கிருப்பவர்களை பத்திரமாக பூமிக்கு அழைத்து வரவும் போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த விண்கலத்தில் சில தொழில்நுட்ப பிரச்சினைகள் ஏற்பட்டிருப்பதால், தாம் அழைத்துச் சென்றவர்கள் இல்லாமல், குறித்த விண்கலம் பூமிக்கு திரும்புகிறது.

முன்னதாக, பூமியிலிருந்து ஏறத்தாழ 400 கிலோ மீற்றர் உயரத்தில் அமைந்துள்ள சர்வதேச விண்வெளி மையத்திற்கு விண்வெளி வீரர்களை அழைத்துச்சென்று, அழைத்து வரும் பணிகளை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவே மேற்கொண்டு வந்தது.

பின்னர் இந்த பணிகளை தனியார் வசம் ஒப்படைக்க நாசா முடிவெடுத்தது. இதற்காக போயிங் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. போயிங் நிறுவனத்திற்கு விமான தயாரிப்பில் முன் அனுபவம் உண்டு என்ற அடிப்படையில்தான் அந்த நிறுவனத்தை நாசா தேர்ந்தெடுத்தது.


இதனடிப்படையில் போயிங் நிறுவனம் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்காவின் மற்றொரு விண்வெளி வீரரான புட்ச் வில்மோர் என இருவரையும் சர்வதேச விண்வெளி மையத்திற்கு அழைத்து சென்று, மீண்டும் பாதுகாப்பாக பூமிக்கு கொண்டு வரும் பணியை ஏற்றுக்கொண்டது.

இதற்காக 'ஸ்டார் லைனர்' எனும் விண்வெளிக்கப்பலையும்; “போயிங்” தயாரித்தது. இந்த விண்வெளிக்கப்பல் கடந்த ஜூன் 5ம் திகதியன்று விண்வெளி மையத்துக்கு புறப்பட்டு ஜூன் 7ஆம் திகதி அங்கு சென்றடைந்தது.

இதனையடுத்து அவர்கள் இருவரும் ஜூன் 14ம் திகதியன்று மீண்டும் பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும். ஆனால், ஸ்டார் லைனரில் ஏற்பட்ட ஹீலியம் வாயு கசிவு மற்றும் உந்து விசை கருவியில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினை என்பன இந்த பயணத்தை இன்று வரை தாமதப்படுத்தியுள்ளது.

சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து பூமிக்கு திரும்ப 6 மணி நேரங்கள் தேவைப்படும் நிலையில், இந்த பிரச்சினை இன்னும் சரி செய்யப்படவில்லை என்பதால், ஸ்டார்லைனர் விண்கலம் இன்று 6 ஆம் திகதி வெறுமையாக பூமிக்கு திரும்பவுள்ளாக நாசா அறிவித்துள்ளது.அதேநேரம் எதிர்வரும் 2025ம் ஆண்டு, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் க்ரூ விண்கலம், சர்வதேச விண்வெளி மையத்திற்கு செல்கிறது. அதில், சுனிதாவும், வில்மோரும் திரும்புவார்கள் என நாசா அறிவித்திருக்கிறது.   

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top