நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் முதலமைச்சர் ஆவதை தடுக்க சுமந்திரன் சதி செய்துள்ளார் என இராஜாங்க அமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை மட்டக்களப்பு கூழாவடியில் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவினை ஆதரிக்கும் கூட்டம் நடைபெற்ற போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், “வடக்கில் மாகாணசபையில் தமிழரசுக்கட்சிக்குக்குள் ஏற்பட்ட குத்துவெட்டுகளும் பதவி மோதல்களுமே பல்வேறு இழப்புகளை சந்தித்து பெற்றுக்கொண்ட மாகாணசபையினை இல்லாமல் செய்த சதிகார கும்பலே அது.
இவர்கள் எல்லாம் சஜித் பிரேமதாசவுக்கு பின்பாக நிற்பதனால் இவர்களின் கோரிக்கைகளை கிழக்கு மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
நாங்கள் ஒட்டுமொத்த கிழக்கு மாகாணத்தின் அதிகாரத்தினையும் கைப்பற்றி, ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தினை பயன்படுத்தி அவரைக்கொண்டு கிழக்கு மாகாணசபையினை நாங்கள் கைப்பற்றவேண்டும்.
நாடாளுமன்ற தேர்தலிலும் நாங்கள் பெரும் கூட்டணி அமைக்க வேண்டும்.அதற்கு முன் ஆயத்தமே அம்பாறையில் நடைபெற்ற கூட்டம்.
இதற்கு முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன், ஈபிடிபி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சங்கர், சில மாகாணசபை உறுப்பினர்களும் வந்தார்கள்.இவர்களையெல்லாம் இணைத்து ஒரு கூட்டணி அமைக்கலாமா என்று சிந்திக்கின்றோம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.