பொதுவாக ஆடையை வாங்கும் முன்பு அது நமக்கு சரியாக இருக்கின்றதா என்பதை ட்ரையல் அறைக்கு போட்டு பார்த்து தான் வாங்குவோம். இனி அதற்கு அவசியமே இல்லையாம்.
புதிதாக வாங்கும் ஆடைகளை ட்ரையல் அறைக்கு சென்று அணிந்து பார்க்காமல் வெறும் AI மூலம் அமர்ந்து அவதானிக்கலாம். கூகுள் AI ஷாப்பிங் கருவி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் ஆண்களும் பெண்களும் ஆடைகளை விர்சுவலாக அணிந்து பார்க்கலாம்.
ஒரு குறிப்பிட்ட ஆடை XXS முதல் XXXL வரையிலான வெவ்வேறு அளவுகளில் எப்படி இருக்கும் என்பதை காட்சிப்படுத்தும் வகையில் கூகுள் நிறுவனத்தின் மெய்நிகர் கருவி உருவாக்கப்பட்டுள்ளது.
பயனர்கள் தங்களின் தோற்றம் மற்றும் அளவை வைத்து மாதிரியை தெரிவு செய்து, அணிந்து பார்க்கலாம். இந்த வசதி ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஷாப்பிங்கிற்கு இடையே உள்ள இடைவெளியைக் குறைத்து, வாங்குவதற்கு முன் ஆடைகளை அணிந்து பார்த்த அனுபவத்தைக் கொடுக்கிறது.
ஆடையையும், உங்களைப் போன்ற ஒரு மாடலையும் தேர்ந்தெடுத்து, குறித்த ஆடை எப்படி இருக்கும் என்பதை பார்த்துவிடலாம். மேலும் மடிப்புகள், சுருக்கங்கள் மற்றும் பிற விபரங்களையும் அதிலே பார்த்துக் கொள்ளலாம்.
பின்பு நீங்கள் ஆடையை வாங்க வேண்டும் என்று விரும்பினால், விற்பனையாளரின் தளத்திற்குச் சென்று வாங்கலாம்.ஜெனரேட்டிவ் AI தொழில்நுட்பத்தின் டிஃப்யூஷன் திறனை பயன்படுத்தி இந்த கருவி செயல்படுகிறது என்று கூகுள் கூறுகிறது.
இவை ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் போது எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சனையை நிவர்த்தி செய்கின்றது.
ஷாப்பிங் செய்பவர்கள் இந்த வழியில் ஆடைகளை விர்சுவலாக அணிந்து பார்ப்பதன் மூலம் கணிசமான நேரத்தையும் மிச்சப்படுத்தலாம் என கூகுள் தெரிவிக்கிறது.