அமைச்சர்களுக்கு எங்களிடம் எந்தவிதமான தட்டுப்பாடுகளும் இல்லை என தேசிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது "எந்தக் கட்சி வந்தாலும் நானே கடற்றொழில் அமைச்சர். ஆகவே, அநுரகுமாரவின் ஆட்சியிலும் நான்தான் அமைச்சராக வரப்போகின்றேன், அதனால் எனக்கு வாக்களியுங்கள் என்ற ரீதியில் சித்து விளையாட்டுக்களை முன்னாள் கடல் தொழில் அமைச்சர் செய்வதை காணக்கூடியதாக இருக்கின்றது.
அமைச்சர்களுக்கு எங்களிடம் எந்தவிதமான தட்டுப்பாடுகளும் இல்லை. கடந்த காலங்களில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு கூஜா தூக்கிய உங்களைப் போன்றவர்களை எங்களுடைய அமைச்சுகளில் சேர்த்துக்கொள்ள மாட்டோம்." என தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், "ஒரு சில அரசியல் கட்சிகள் தேசிய மக்கள் சக்தியின் பெயரைப் பயன்படுத்தி அரசியல் பிரச்சாரங்களை செய்து கொண்டு வருகின்றன. இது தொடர்பில் தேர்தல் ஆணையகத்தில் முறைப்பாடு ஒன்றைச் செய்யவுள்ளோம்.
வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அநுரகுமார திஸா நாயக்கவோடு எடுத்த புகைப்படங்களைப் பயன்படுத்தி தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவானவர்கள் என்று கூறுகின்ற போக்குக் காணப்படுகின்றது. எனவே, உடனடியாக இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையகத்திடம் கேட்டுக்கொள்கின்றோம்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியினுடைய வேட்பாளராகப் போட்டியிட்டிருந்த அநுரகுமார திஸாநாயக்க வெற்றி பெற்றிருந்தார். அதன் மூலம் மக்களுடைய அமோக ஆதரவு அவருக்குக் கிடைக்கப்பெற்றுள்ளது. குறிப்பாக தமிழ் மக்களுடைய ஆதரவு பலமடங்கு பெருகியுள்ளது.
இங்கிருக்கக் கூடிய சில தமிழ்க் கட்சிகள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்துவிட்டு சேர்ந்து புகைப்படங்களை எடுத்துக்கொள்கின்றார்கள். அந்தப் புகைப்படங்களை வைத்து இங்கு அரசியல் வியாபாரம் செய்கின்ற போக்கு காணப்படுகின்றது.
அண்மையில் டக்ளஸ் தேவானந்தாவும் ஜனாதிபதியைச் சந்தித்திருந்தார். அந்தப் புகைப்படங்களை வைத்து தங்களுக்குச் சாதகமான அரசியல் நாடகங்களை டக்ளஸ் தேவானந்தா செய்து வருகின்றார். அவர் மாத்திரமல்ல சுமந்திரன், சிறீதரன் போன்றோரும் இதனையே செய்கின்றனர்.
கடந்த காலங்களில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு கூஜா தூக்கியவர்கள், மஹிந்த ராஜபக்ஷவினுடைய ஊழல், மோசடிகளுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதரவாக இருந்தவர்கள், மஹிந்த ராஜபக்ஷவால் கொண்டுவரப்பட்ட மக்கள் விரோதச் சட்டங்கள் அனைத்துக்கும் ஆதரவு தெரிவித்தவர்களை ஒருபோதும் எங்களுடன் இணைக்கப்போவதில்லை.
எந்தக்கட்சி வந்தாலும் நானே கடற்றொழில் அமைச்சர், ஆகவே அநுரகுமாரவின் ஆட்சியிலும் நான்தான் அமைச்சராக வரப்போகின்றேன், அதனால் எனக்கு வாக்களியுங்கள் என்ற சித்து விளையாட்டை டக்ளஸ் தேவானந்தா செய்வதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.
தேசிய மக்கள் சக்தியில் வெறுமனே 25 அமைச்சுப் பதவிகள் மாத்திரமே காணப்படும். 25 அமைச்சுப் பதவிகளையும் பொறுப்பேற்பதற்கு 50 இற்கும் அதிகமான திறமை உள்ளவர்கள் தேசிய மக்கள் சக்தியில் உள்ளார்கள்.
எனவே, முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன், அமைச்சர்களுக்கு எங்களிடம் எந்தவிதமான தட்டுப்பாடுகளும் இல்லை. உங்களைப் போன்றவர்களை எங்களுடைய அமைச்சுக்களில் சேர்த்துக்கொள்ள மாட்டோம்.
இன்னொருவரும் தான்தான் வெளிவிவகார அமைச்சர், நீதி அமைச்சர் என்று சொல்லிக்கொண்டு திரிகின்றார். இது ஒரு வெட்கக்கேடான செயல். கடந்த காலங்களில் மைத்திரிபால சிறிசேனவோடு ஆட்சியிலே பங்காளர்களாக இருந்து அந்த அரசை முற்றுமுழுதாகப் பாதுகாத்தவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே. அன்றைக்கு ஒன்றையுமே செய்ய முடியாதவர்கள் இன்று வந்து தேசிய மக்கள் சக்தியினுடைய அரசோடு இணைந்து மக்களுக்குச் சேவை செய்யப்போவதாக கூறுகின்றார்கள். இது நகைப்புக்குரிய விடயமாகும்." - என அவர் தெரிவித்துள்ளார்.