முறையான அனுமதிப்பத்திரம் இன்றி வெளிநாட்டு வேலை வழங்குவதாகக் கூறி பணத்தை ஏமாற்றிய இரண்டு பெண்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இந்த இரண்டு பெண்களில் ஒருவர், தென் கொரியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, தலா ரூ.5 இலட்சமும், மற்றுமொரு பெண் இத்தாலியில் வேலை தருவதாகக் கூறி ஒருவரிடம் 15 இலட்சம் ரூபாவும் மோசடி செய்துள்ளனர்.
இதற்கமைய, உறுதியளித்தபடி வேலை வழங்கப்படவில்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு கிடைத்த 4 முறைப்பாடுகள் தொடர்பில் கண்டியில் வசிக்கும் பெண் ஒருவர் விசாரணை அதிகாரிகளால் அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண் கண்டி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், 4 வழக்குகளுக்கும் 10 இலட்சம் ரூபா 2 சரீரப் பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, 15 இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்த மற்றுமொரு பெண் விசேட புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் கலகெதர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை கலகெதர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய பின்னர், அவரை ஒக்டோபர் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபருக்கு எதிரான முறைப்பாடுகள் பணியகத்திற்கு மேலும் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், முறைப்பாடுகளை ஆராய்ந்த பின்னர் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.