இலங்கையின் புதிய அரசாங்கம், கொழும்பை தளமாகக் கொண்ட இராஜதந்திரிகளுக்கு அதன் வெளியுறவுக் கொள்கை குறித்து விளக்கமளித்துள்ளது.
வெளிநாடுகளின் உயர்ஸ்தானிகர்கள், தூதுவர்கள், இராஜதந்திர சமூக உறுப்பினர்கள், ஐக்கிய நாடுகளின் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மற்றும் கொழும்பில் உள்ள சர்வதேச அமைப்புகளின் தலைவர்களுக்கு இந்த விளக்கத்தை இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நேற்று வழங்கியுள்ளார்.
நவம்பரில் நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்த பின்னரே, புதிய அரசாங்கம் முன்னோக்கிச் செயற்படுவதில் முழுமையாக கவனம் செலுத்த முடியும் என்று அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தேர்தலின் பின்னரே, அரசாங்கம் இருதரப்பு தொடர்பான விடயங்களில் கவனம் செலுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் முடிவடைந்த ஜனாதிபதித் தேர்தலில், இலங்கை மக்கள் ஒரு புதிய நெறிமுறை அரசியல் கலாசாரத்தில் மாற்றத்திற்கான ஆணையை வழங்கியுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
இலங்கை நாட்டின் கடன் மறுசீரமைப்பு செயல்முறை முடிவடையும் தருவாயில் உள்ளது இது, சர்வதேச நாணய நிதியத் திட்டத்தின் மூன்றாவது மதிப்பாய்வை நோக்கி அரசாங்கம் செல்வதற்கு உதவியுள்ளதாக ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இலஞ்சம் மற்றும் ஊழலைப் பொறுத்துக் கொள்ளக் கூடாது என்ற உறுதிமொழிகளுக்கு இணங்க, சில முக்கிய விடயங்களில் ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இனம், மதம், வர்க்கம் மற்றும் பிற வேறுபாடுகளின் அடிப்படையிலான பிளவு சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து மதிப்புள்ள தேசத்தை உருவாக்குவது இந்த அரசாங்கத்தின் மற்றொரு முக்கிய நோக்கமாகும் என்று விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
கடந்த கால பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது உட்பட அனைத்து குடிமக்களின் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை புதிய அரசாங்கம் பாதுகாக்கும்.
இதனடிப்படையில் விசாரணைகளின்றி இருந்த முக்கிய சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பிரிக்ஸ் மற்றும் புதிய அபிவிருத்தி வங்கியின் உறுப்புரிமைக்கு விண்ணப்பிக்க இலங்கை முடிவு செய்துள்ளது.
இதற்கிடையில், இந்த மாத முற்பகுதியில் இலங்கை வந்த இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், பிரதமர் நரேந்திர மோடியின் சார்பாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை, வசதியான திகதியில் இந்தியாவுக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
2024 அக்டோபர் 9ஆம் திகதியன்று ஜெனிவாவில் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கம் ஒரு அறிக்கையை வெளியிட்டது.
அதில், மக்களின் நம்பிக்கையை ஏற்படுத்தும் நல்லிணக்கத்திற்கான நம்பகமான மற்றும் சுயாதீனமான உள்நாட்டுப் பொறிமுறைகள் மற்றும் செயல்முறைகளைக் கொண்டிருப்பதற்கான இலங்கையின் உறுதிப்பாட்டை அரசாங்கம் முன்னிலைப்படுத்தியுள்ளது என்று ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானத்தை இலங்கை நிராகரித்த போதிலும், பேரவையின் பொறிமுறைகளுடன் இலங்கை ஆக்கபூர்வமாக தொடர்ந்து ஈடுபடும் அதேநேரம் மனித உரிமைகள் பிரச்சினைகளில் வெளி பொறிமுறையை நிறுவும் தீர்மானத்தை இலங்கை எதிர்க்கிறது என்றும் அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.