வவுனியா ஓமந்தை பகுதியில் உள்ள பூவரசன்குளம் பகுதியில் நேற்று முன்தினம் (10) காணி பிணக்கு காரணமாக இடம்பெற்ற வாள்வெட்டில் இதுவரை இருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் இன்னொருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார்.
இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, குறித்த காணியில் மாமன் மற்றும் மருகன் ஆகிய இருவரும் வேலை செய்து கொண்டிருந்த போது அங்கு வந்த நபர்கள் இருவர் மீதும் மிளகாய் தூளை அள்ளி வீசி வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டதாக அந்த ஊர் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்போது இரண்டு பிள்ளைகளின் தந்தையான இளங்கோ என்ற 38 வயதான நபர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததுடன், 42 வயதுடைய மூன்று பிள்ளைகளின தந்தையான ரூ.திலீபன் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரும் நேற்று (11) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அத்துடன் சம்பவம் தொடர்பில் ஓமந்தைப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.