எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது குறித்து ஐக்கிய தேசியக் கட்சி ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது குறித்து மூன்று யோசனைகள் முன்மொழியப்பட்டுள்ளன.
கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில், நேற்றைய தினம் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் இந்த யோசனைகள் முன்மொழியப்பட்டுள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிடுவது, எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடுவது மற்றும் யானைச் சின்னத்தில் போட்டியிடுவது ஆகிய மூன்று யோசனைகள் முன்மொழியப்பட்டுள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் கட்சியின் துணைத் தலைவர் ருவான் விஜேவர்தன முன்னெடுத்து வரும் பேச்சுவார்த்தைகளை தொடருமாறு கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த யோசனைக்கு நவீன் திஸாநாயக்க, ஆசு மாரசிங்க மற்றும் அகில விராஜ் காரியவசம் போன்றவர்கள் ஆதரவினை வெளியிட்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி இரண்டு தடவைகள் தேர்தலில் தோல்வியடைந்துள்ள நிலையில் இந்த தடவையும் தோல்வியடையும் சாத்தியம் உண்டு என வஜிர அபேவர்தன மற்றும் சாகல ரட்நாயக்க ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
ரணில் விக்ரமசிங்க எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்ட போதிலும் பொதுத் தேர்தலில் அவ்வாறு போட்டியிடுவது தொடர்பில் சிக்கல்கள் நிலவுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.