பல்கலைக்கழகங்களில் புதிய மாணவர்களை பதிவதில் பிரச்சினை எழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் அண்மையில் பதவி விலகியிருந்தனர்.
இந்த பதவி வெற்றிடங்கள் நிரப்பப்டாமையினால் பல்கலைக்கழக மாணவர்களை பதிவு செய்ய முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
மாணவர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டதன் பின்னரே, அந்தந்த பல்கலைக்கழகங்களுக்கு குறித்த மாணவர்களின் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அதிகாரபூர்வ ஆவணங்கள் கிடைக்கப் பெற முன்னதாகவே சில பல்கலைக்கழகங்கள் மாணவர்களை சேர்க்கும் பணிகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாணவர்களின் காலம் விரயமாகக் கூடாது என்பதற்காக இவ்வாறு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மாணவர்களை பதிவு செய்தல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அனுமதி அவசியமாகின்றது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மாதாந்தம் இரண்டு தடவைகள் மட்டுமே கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்படி, எதிர்வரும் 24ம் திகதியே ஆணைக்குழுவின் அடுத்த கூட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அலுவலகத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஸ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க கடந்த 14ம் திகதி பதவியை ராஜினாமா செய்திருந்தார்.