தேர்தலில் வெற்றிபெற்றாலும் சலுகைகள் எதுவும் கிடைக்காது என்பதனாலேயே பலர் இம்முறை தேர்தலில் போட்டியிடாமல் விலகியுள்ளதுடன் அரசியலில் இருந்தும் ஓய்வு பெற்றுள்ளனர் என்று தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி(Sunil Handunnetti) தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி தேர்தலில் எமக்கு கிடைத்த வெற்றி என்பது உண்மையில் மக்கள் பெற்ற வெற்றியாகும். அண்மையில் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் வழங்கிய ஆணையின் விளைவாக, எதிர்வரும் பொதுத்தேர்தலின் முடிவும் தெளிவாகியுள்ளது.
இந்த அரசியல்வாதிகள், தாங்கள் மக்களால் முழுமையாக நிராகரிக்கப்பட்டதை முன்கூட்டியே உணர்ந்து தேர்தலில் போட்டியிடுவதில்லையென முடிவு செய்துள்ளனர். தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் அது வீணானது என்று நினைக்கின்றனர்.
வாகன அனுமதிப்பத்திரம், பாதுகாப்புப் பணியாளர்கள், உத்தியோகபூர்வ இல்லங்கள் போன்றவற்றைப் பெறமாட்டார்கள் என்பதும், ஊழலில் ஈடுபடும் நிலையில் இருக்க மாட்டார்கள் என்பதும் அவர்களுக்கு உறுதியாகத் தெரிந்துவிட்டது. எதிர்க்கட்சியில் இருந்தாலும், தங்களால் பழைய ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
இதனால்தான் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் அரசியலில் இருந்து விலகி தேர்தலில் போட்டியிடுவதை தவிர்க்க முடிவு செய்திருந்தனர் என குறிப்பிட்டுள்ளார்.