மாதாந்த விலைத் திருத்தத்திற்கமைய, லிட்ரோ சமையல் எரிவாயு விலைகளில் மாற்றம் மேற்கொள்ளப்படாது என புதிதாக நியமிக்கப்பட்ட லிட்ரோ கேஸ் நிறுவனத் தலைவர் சன்ன குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு நேற்று கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்படி இறுதியாக கடந்த ஜூலை 03ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லிட்ரோ (Litro) சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் பின்வருமாறு திருத்தப்பட்டிருந்தது.
12.5kg சமையல் எரிவாயு சிலின்டரானது 3,790 ரூபாவில் இலிருந்து 3,690 ரூபாவாகவும், 5kg சமையல் எரிவாயு சிலின்டரானது 1,522 ரூபாவில் இலிருந்து 1,482 ரூபாவாகவும், 2.3kg சமையல் எரிவாயு சிலின்டரானது 712 இலிருந்து 694 ரூபாவாகவும் விலைகுறைப்பு மேற்கொள்ளப்பட்டது.
லிட்ரோ எரிவாயு நிறுவனம் மற்றும் லிட்ரோ எரிவாயு டர்மினல் லங்கா நிறுவனத்தின் தலைவராக சன்ன குணவர்தன நேற்றைய தினம் நியமிக்கப்பட்டார்.
புதிய ஜனாதிபதியின் நியமனத்தை கருத்தில் கொண்டு லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தனது பதவியில் இருந்து விலகியதை தொடர்ந்து புதிய தலைவராக சன்ன குணவர்தன நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.