கண்டி வத்தேகம கல்வி வலயத்தின் குண்டசாலை பிரிவிலுள்ள கெஹலிய ரம்புக்வெல்ல ஆரம்ப பாடசாலையின் பெயரை உடனடியாக மாற்றுமாறு மத்திய மாகாண ஆளுநர் எஸ்.பி.எஸ்.அபயகோன் நேற்று உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் இக்கல்லூரியை குண்டசாலை றோயல் ஆரம்ப பாடசாலை என மாற்றம் செய்வதற்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் கட்டமைப்புக் குழு சமர்ப்பித்த யோசனைக்கு ஆளுநர் அனுமதியளித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, கடந்த காலங்களில், முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், இப்பாடசாலையின் உத்தியோகபூர்வ பெயரை மாற்ற வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உட்பட பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் பல அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
2012 ஆம் ஆண்டு மத்திய மாகாண கல்வி திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட கல்வி அபிவிருத்தி வேலைத்திட்டம் மற்றும் சிறந்த பாடசாலை என்ற திட்டத்தின் கீழ் இப்பாடசாலைக்கு கெஹலிய ரம்புக்வெல்ல ஆரம்ப பாடசாலை என பெயரிட நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் இனிமேல் இக்கல்லூரியை குண்டசாலை றோயல் ஆரம்பப் பாடசாலை என மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது