இலங்கையின் செவிப்புலன் அற்ற மாணவர் ஒருவர் 2024ஆம் ஆண்டுக்கான அவுஸ்திரேலியா-விக்டோரியன் சர்வதேச கல்வி விருதுகளின் ஆராய்ச்சி பிரிவில் இறுதிப் போட்டியாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையின் முனைவர் (Phd) மாணவரான அஜ்மல் அப்துல் அஸீஸ் என்ற மாணவரே இந்த போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
இது குறித்து இலங்கையில் உள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் கருது வெளியிடுகையில், ஹைப்ரிட் கோக்லியர் உள்வைப்புகள் தொடர்பான அவரது ஆராய்ச்சி, செவித்திறன் தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்திற்கு உதவியளிப்பதாக தெரிவித்துள்ளது.
இதே வேலை குறித்த விடயம் தொடர்பில் குறித்த மாணவரான அஜ்மல் அப்துல் அஜீஸ் தெரிவிக்கையில், இது உண்மையிலேயே தமக்கு சிறந்த அங்கீகாரம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த அங்கீகாரம் கிடைத்தபோது, தம் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த மூன்றரை வருட கற்கையின்போது, எதனை செய்துவிட்டோம் என்று கேட்பதை விட, இதனை செய்துவிட்டோம் என்ற உணர்வு தமக்கு திருப்தியாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த விடயம் தொடர்ப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கோக்லியர் உள்வைப்புகள் மக்களுக்கு கேட்கும் திறனை தருகிறது எனினும் அது மின்சாரத்தில் இயங்குகிறது.
எனினும், அதனை ஒளியை பயன்படுத்தி இயங்கச் செய்வதற்கான தொழில்நுட்ப ஆராய்ச்சி தற்போது நடைபெற்று வருகின்றது. உலகளவில் சுமார் 700 மில்லியன் மக்கள் செவிப்புலன் அற்றவர்களாக உள்ளனர். அவர்கள் மத்தியில் தமது ஆராய்ச்சி விழிப்புணர்வை ஏற்படுத்தும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.